பிரான்ஸ் நாட்டவர்களுக்கு பிரித்தானியர்களைப் பிடிக்காது... திரும்பிப் போங்கள்: எல்லையில் அவமதிக்கப்பட்டதால் கொந்தளிக்கும் பிரித்தானியர்கள்
பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் செல்ல முயன்ற பிரித்தானியர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்துள்ளார்கள்.
மே 31 முதல் பிரான்சுக்கு செல்லும் பிரித்தானியர்கள், கட்டாயம் பயணித்தே ஆகவேண்டும் என்பதற்கு சரியான காரணம் கொடுத்தால் மட்டுமே பிரான்சுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதியை திடீரென அறிமுகம் செய்தார் பிரான்ஸ் ஜனாதிபதி பிரித்தானியாவில் 'Covid Delta' என்று பெயரிடப்பட்டுள்ள இந்திய வகை கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சம் காரணமாகவே பிரான்ஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மரணம், குழந்தைகளை கவனித்தல் ஆகிய காரணங்களுக்காக பிரான்சுக்குள் செல்பவர்கள் மற்றும், பிரான்ஸ் குடிமக்கள் அல்லது ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களாகவும் இருப்பவர்கள் மட்டுமே பிரான்சுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன், பயணம் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்பு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை (முன்பு இது 72 மணி நேரமாக இருந்தது), பிரான்சுக்குள் நுழைந்ததும் 7 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தல் என பல கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று பிரான்ஸ் செல்ல முயன்ற பிரித்தானியர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்தார்கள்.
இமானுவல் மேக்ரானின் கடைசி நேர விதி மாற்றத்தை கடுமையாக விமர்சித்த அவர்கள், மக்களின் அன்றாட வாழ்வின் உண்மையான பிரச்சினைகளை மறந்த அவர் அரசியல் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு லண்டனைச் சேர்ந்த Ahmed Benhadrian (59) ஒரு வாரத்திற்கு முன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட தனது சகோதரரைக் காண்பதற்காக பாரீஸ் புறப்பட்டிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து நேற்று ரயில் ஏறச் சென்ற நிலையில் அவரை எல்லையில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், நீங்கள் ஒரு பிரித்தானியர், ஆகவே, நீங்கள் பிரான்சுக்குள் நுழைய முடியாது என்று கூறியுள்ளனர்.
உடல் நலமில்லாமல் இருந்த தன் சகோதரரைக் காண தான் செல்வதாக கூறியும், தான் முழுமையாக தடுப்பூசி போட்டாயிற்று, பிசிஆர் பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்று காட்டும் சான்றும் வைத்திருக்கிறேன் என்று கூறியும் அவரை அனுமதிக்காத அதிகாரிகள், அவருக்கு முன்னால் வரிசையில் நின்ற ஒரு பெண்ணை அனுமதித்திருக்கிறார்கள்.
அந்த பெண் ஜேர்மனியைச் சேர்ந்தவர், அவர் பிரான்ஸ் செல்ல, சரியான காரணம் கூட கூறவில்லையாம், எங்கு செல்கிறார் என்பதற்கான சரியான முகவரி கூட அவரிடம் இல்லையாம். கேட்டால், அவர் ஐரோப்பியர், அவர் பிரான்ஸ் செல்லலாம், நீங்கள் பிரித்தானியர், பிரித்தானியா ஐரோப்பாவிலிருந்து வெளியேறிவிட்டது, ஆகவே நீங்கள் செல்ல முடியாது என்று கூறினார்களாம் அதிகாரிகள்.
பிரான்ஸ் நாட்டவர்களுக்கு பிரித்தானியர்களைப் பிடிக்கவில்லை, இது அரசியல் ரீதியானது, அதனால்தான் அவர்கள் பிரித்தானியர்களை பிரான்சுக்குள் அனுமதிக்கமாட்டேன்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் Benhadrian.
பிரித்தானியாவை விட பிரான்சில் அதிக அளவில் கொரோனா பரவல் இருக்கிறது, ஆனால், இது பிரித்தானியா என்பதால் அவர்கள் பிரச்சினை செய்கிறார்கள் என்று கூறும் Benhadrian, குறிப்பாக பிரெக்சிட்டுக்குப் பின் பிரான்ஸ் நாட்டவர்கள் அதிக தொல்லை கொடுக்கிறார்கள் என்கிறார்.
எங்களுக்கு உதவ பிரித்தானிய சுங்க அதிகாரிகளோ எல்லை அதிகாரிகளோ இல்லை என்று கூறும் Benhadrian, அவமதிக்கப்பட்டது போல உணர்கிறேன், அவர்கள் மக்களுக்கிடையே பாரபட்சம் காட்டுகிறார்கள் என்கிறார்.
Benhadrian மட்டுமல்ல, நேற்று பிரான்சுக்கு செல்ல முயன்ற பிரித்தானியர்கள் ஏராளம் பேர் இதேபோல திருப்பி அனுப்பப்பட்டதால் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள்.