திடீரென பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஜேர்மானியர்: இறுதியில் ஏற்பட்ட இழப்பு
ஜேர்மானியர் ஒருவர் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒன்றில் அவரும், அவருடனிருந்த பெண்ணும் கொல்லப்பட்டனர்.
இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம், Wallisellen என்ற சிறிய சுவிஸ் நகரத்தில் நடைபெற்றுள்ளது.
ஜேர்மானியர் ஒருவர், மற்றொருவரைக் கடத்திவைத்துக்கொண்டு அவரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக ஒரு புகார் பொலிசாருக்கு வந்துள்ளது.
பின்னர் கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில், சுவிஸ் பொலிசார் அந்த ஜேர்மானியரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், அவர் Wallisellen நகரில் இருப்பது தெரியவரவே, நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில், அவரைக் கைது செய்வதற்காக அவர் இருந்த வீட்டிற்கு பொலிசார் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் துவங்கியுள்ளார் அந்த நபர்.
பொலிசார் திருப்பிச் சுட, அந்த நபர் மீது குண்டு பாய்ந்துள்ளது. உடனடியாக வீட்டுக்குள் புகுந்த பொலிசார் அங்கு பெண் ஒருவரும் சுடப்பட்டுக் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் காப்பாற்ற மருத்துவ உதவிக் குழுவினர் எடுத்த முயற்சி பலனின்றி அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அந்தப் பெண் பொலிசார் சுட்டதில் உயிரிழந்தாரா, அல்லது அந்த ஜேர்மானியர் பொலிசாரை நோக்கிச் சுடும்போது தவறுதலாக குண்டு பாய்ந்து இறந்தாரா என்பது தெரியவில்லை.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.