காதலனைக் காணவில்லை என பேஸ்புக்கில் செய்தி வெளியிட்ட இளம்பெண்: பின்னர் கிடைத்த அதிர்ச்சியளிக்கும் செய்தி
அமெரிக்க இளம்பெண் ஒருவர் சீனாவில் வாழ்ந்துவந்த நிலையில், திடீரென தனது காதலனைக் காணவில்லை என பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டு அவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளார்.
நடந்தது என்னவென்றால், பிரித்தானியாவிலுள்ள Norwichஐ சேர்ந்த பால் (Paul McGee, 40), சீனாவிலுள்ள Shenzhenஇல் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது, அமெரிக்காவில் பிறந்த ரேச்சல் (Rachel Waters) என்ற பெண்ணை சந்தித்திருக்கிறார்.
இருவரும் காதலர்களாக பழகியிருக்கிறார்கள். இந்நிலையில், ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் சென்று வருவதாகக் கூறி பிரித்தானியா புறப்பட்டிருக்கிறார் பால். போனவர் போனவர்தான். அப்புறம் அவரிடமிருந்து ரேச்சலுக்கு எந்த தகவலும் வரவில்லை.
சுமார் ஆறு வாரங்களாக பாலிடமிருந்து எந்த தகவலும் வராததால், Norfolk நகர பேஸ்புக் பக்கம் ஒன்றில் ஒரு செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார் ரேச்சல்.
அந்த செய்தியில், தான் சீனாவில் வாழ்வதாகவும், தன் காதலரான பால் சொந்த ஊருக்குச் சென்றுவருவதாகக் கூறிச் சென்றதாகவும், அவர் இப்போது சீனா திரும்பியிருக்கவேண்டும், ஆனால் இதுவரை அவர் வரவில்லை, என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, எனக்குக் கவலையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
அந்த செய்தியைக் கண்ட பாலுடைய தோழி ஒருவர், பாலுக்கு ஏற்கனவே மனைவியும் பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்றும், தான் ரேச்சலுக்காக வருந்துவதாகவும் ஒரு பதில் செய்தியை பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார். கூடவே, அடடா, பாலுக்கு சீனாவிலும் ஒரு காதலி இருக்கிறார் போலிருக்கிறதே என கிண்டலாக ஒரு செய்தியும் தெரிவித்திருக்கிறார் அவர்.
அந்த செய்தியை கண்ட ரேச்சல், உடனடியாக தனது செய்தியை பேஸ்புக்கிலிருந்து அகற்றிவிட்டாராம். அவரிடமிருந்தும் சரி பாலிடமிருந்தும் சரி, அப்புறம் எந்த சத்தத்தையும் காணோம்...
நடந்தது என்னவென்றால், இரண்டு ஆண்டுகளாக தன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறார் பால். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர் சொந்த ஊருக்கு வர, இருவரும் சந்தித்துக்கொள்ள, உடனே இருவருக்கும் பாசம் பொங்க, மீண்டும் இணைந்து வாழ்வது என முடிவு செய்திருக்கிறார்கள்.
ரேச்சலின் நிலைமைதான் பரிதாபமாகிவிட்டது!