உக்ரைன் போரால் கனடாவில் ஏற்பட இருக்கும் பெரும் தாக்கம்: எச்சரிக்கும் நிபுணர்கள்
உக்ரைனில் போர் நடந்துவரும் நிலையில், எப்படி இப்போதைக்கு போர் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லையோ, அதேபோல, உயர்ந்துள்ள விலைவாசியும் இப்போதைக்கு குறையப்போவதில்லை என கனேடிய நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
போர் காரணமாக கனடாவில் முதலில் பாதிக்கப்பட்டுள்ளது, எரிவாயு விலைகள்... அடுத்து உணவுப்பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மூன்று முதல் ஐந்து மாதங்களுக்குள் கனடா தானியங்கள் அடிப்படையிலான உணவுப்பொருட்களின் விலையில் உயர்வை சந்திக்கப்போகிறது என்று கூறும் Dalhousie பல்கலை பேராசிரியரான Sylvain Charlebois, அடுத்து கால்நடைகளிடமிருந்து கிடைக்கும் பொருட்கள் விலை உயரும் என்கிறார்.
முதலில் இறைச்சி தயாரிப்புகள் பிறகு பால் பொருட்கள் விலை பாதிக்கப்படும் என்கிறார் அவர்.
பொதுவாக, உக்ரைனை விவசாய உணவுத்துறையின் ஆற்றல் இல்லம் என அழைப்பார்கள். அங்கு ஏராளம் பயிர்கள், குறிப்பாக கோதுமை, மக்காச்சோளம் முதலான உணவுப்பயிர்கள் பயிரிப்படும்.
உலக் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யப்படும் கோதுமை, மக்காச்சோளம் முதலான பொருட்களில் 25 சதவிகிதம் அங்கிருந்துதான் வருகிறது.
ஆனால், இப்போது அங்கு போர் நிலவும் சூழலில் கருங்கடலில் உள்ள பல துறைமுகங்களில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் உக்ரைன் மற்றும் பெலாரஸிலிருந்து வரும் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
கனடாவில் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.
இதுபோக, கனடாவில் பயன்படுத்தப்படும் உரத்தில் மூன்றில் ஒரு பங்கு முதல் நான்கில் ஒரு பங்கு வரை டீசலிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறதாம். ஆக, பயிர் செய்ய உரம் வேண்டும். அதுவும் தானியங்கள் விலை உயர்ந்துள்ள இந்த நேரத்தில் வேளாண்மைக்கு உரம் கட்டாயம் தேவை.
எரிபொருள், உரம், உணவுப் பொருட்கள் என பல்வேறு பொருட்களின் விலை பாதிக்கப்பட்டும் பாதிக்கப்படவும் உள்ள நிலையில், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் தட்டுப்பாடும் உருவாகியுள்ளதாம்.
ஆக மொத்தத்தில், போர் தொடரும் நிலையில், அது கனடாவில் பல்வேறு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.