பூமியின் வெளிப்புறத்தை விட மெதுவாக சுழலும் உட்புறம்.., இனி இரவு பகல் நேரம் அதிகரிக்குமா?
பூமியின் உள் மையமானது கிரகத்தின் மேற்பரப்பை விட மெதுவாக சுழல்வதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் கண்டுபிடிப்பு
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (யுஎஸ்சி) விஞ்ஞானிகள் பூமியின் உள் மையமானது கிரகத்தின் மேற்பரப்பை விட மெதுவாக சுழல்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது, நிலத்தடி ஆராய்ச்சி கிரக இயக்கவியல் பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. மேலும், பூமியின் காந்தப்புலத்தின் நிலைத்தன்மை மற்றும் இரவு பகலின் காலம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் தெரிவித்துள்ளது.
நேச்சரில் வெளியிடப்பட்ட ஆய்வு, 2010 ஆம் ஆண்டில் பூமியின் உள் மையமானது அதன் வேகத்தைக் குறைக்கத் தொடங்கியது என்பதை தெரிவித்துள்ளது.
இது சுமார் 40 ஆண்டுகளில் முதல் முறையாக பூமியின் மேலோட்டத்தை விட மெதுவாக நகர்கிறது. பூமியின் உட்புற மையமானது நமது கால்களுக்குக் கீழே 4,800 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
ஆராய்ச்சியாளரான ஜான் விடேலும் அவருடன் சில ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
இவர்கள் ஆய்வுக்காக தெற்கு அட்லாண்டிக்கில் உள்ள தெற்கு சாண்ட்விச் தீவுகளைச் சுற்றி 1991 மற்றும் 2023 க்கு இடையில் பதிவுசெய்யப்பட்ட 121 தொடர்ச்சியான பூகம்பங்களை ஆய்வு செய்தனர்.
மேலும், 1971 மற்றும் 1974 க்கு இடையில் நடத்தப்பட்ட சோவியத் அணுசக்தி சோதனைகள் மற்றும் உள் மையத்தின் பிற ஆய்வுகளிலிருந்து பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அணுசக்தி சோதனைகளின் தரவுகளையும் பயன்படுத்தினர்.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பூமியின் உட்கரு வேகம் குறைய தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பல தசாப்தங்களில் முதல்முறையாக உள் மையமானது குறைந்துவிட்டது.
இதுகுறித்து ஜான் விடேல் கூறுகையில், "பூமியின் காந்தப்புலத்தை உருவாக்கும் சுற்றியுள்ள திரவ வெளிப்புற மையத்தின் இயக்கத்தாலும், மேலோட்டமான பாறை மேன்டில் உள்ள அடர்த்தியான பகுதிகளிலிருந்து வரும் ஈர்ப்பு விசையாலும் உள் மையத்தின் சுழற்சியின் வேகம் குறைகிறது" என்றார்.
இதுதான் உள் மையத்தின் சுழற்சியின் வேகம் குறைய காரணமாக மாறி உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. இதனால், முழு கிரகத்தின் சுழற்சியையும் மாற்றி நமது நாட்களை நீட்டிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |