பிரான்சில் இரவு விடுதிகளில் இளம்பெண்கள் ஊசியால் குத்தப்பட்ட விவகாரம்... வசமாக சிக்கினார் குற்றவாளி
பொதுமுடக்கம் காரணமாக பிரான்ஸ் இரவு விடுதிகளின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமுடக்கம் விலக்கப்பட்ட பின் மெதுவாக சகஜ நிலை திரும்பத் துவங்கியது.
ஆனால், எதிர்பாராத ஒரு புதிய பிரச்சினை, மீண்டும் இரவு விடுதிகளின் வருவாய்க்கு தொல்லையாக உருவெடுத்தது.
அது என்னவென்றால், இரவு விடுதிக்கு வருவோரை, குறிப்பாக இளம்பெண்களை, யாரோ ஊசியால் குத்த, அவர்களில் சிலர் தலை சுற்றல், மயக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்கள்.
இதுபோன்ற விடயங்களில், பெண்களுக்கு, அவர்கள் அறியாமலே ஊசி மூலம் போதை மருந்து செலுத்தப்படுவதுண்டு. அப்படி ஊசி குத்தப்பட்டு மயக்கமடைந்த பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட, அல்லது அவர்களுடைய உடைமைகள் திருடப்பட்ட சம்பவங்கள் நடந்ததுண்டு.
இரவு விடுதிகளில் பலர் இப்படி ஊசியால் குத்தப்பட, அது பயத்தை ஏற்படுத்த, மீண்டும் இரவு விடுதிகளின் வருவாய் பாதிக்கப்படும் ஒரு நிலை உருவானது.
இந்நிலையில், பிரான்சின் Toulon நகரில் உள்ள கடற்கரை ஒன்றில் இசை நிகழ்ச்சி ஒன்றைக் காண கூடியிருந்த சுமார் 20 பேர் தாங்கள் ஊசியால் குத்தப்பட்டதாக தெரிவிக்க, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்களிடையே அச்சம் பரவத் தொடங்க, பொலிசார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டார்கள்.
அப்போது, ஒரு 20 வயது இளைஞர் இரண்டு பெண்களை ஊசியால் குத்த முயன்றிருக்கிறார். உடனடியாக அந்தப் பெண்கள் சத்தமிட, பொலிசாரிடம் வகையாக சிக்கிக்கொண்டார் அவர்.
அவரைக் கைது செய்த பொலிசார், அவர் மீது திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டது முதலான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.