ஈரானில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம்.. பாரீஸில் நடைபெற்ற பேரணியில் பொலிசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு
ஈரானில் ஹிஜாப் அணியாததாகற்காக Mahsa Amini என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Amini, பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
பாரீஸில் மக்கள் நடத்திய பேரணியில் பொலிசார் கண்ணீர் புகை குண்டு வீசும் நிலை உருவானதைத் தொடர்ந்து பதற்றம் உருவானது.
விடயம் என்னவென்றால், ஈரானில், ஹிஜாப் அணியாத குற்றத்துக்காக Mahsa Amini என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
அவர் காவல் நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Amini, பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
ஹிஜாப் அணியாததற்காக ஒரு பெண் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட விடயம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெண்கள் பலர் தங்கள் தலைமுடியைக் கத்தரித்து எரியும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார்கள். பல பெண்கள் ஹிஜாபை புறக்கணிக்கத் துவங்கியுள்ளார்கள்.
ஈரானில் Aminiக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்துள்ளன.
அதைத் தொடர்ந்து ஈரானியர்கள் வாழும் மற்ற நாடுகளிலும், மக்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தத் துவங்கியுள்ளார்கள்.
அவ்வகையில், சுமார் 4,000 பேர் பாரீஸில் நேற்று பேரணி ஒன்றை துவக்கி, ஈரான் தூதரகத்தை நோக்கி நடக்கத் துவங்க, பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
முதலில் அமைதியாக நடந்த பேரணியில், சிலர் இஸ்லாமியக் குடியரசு ஒழிக, என்றும் ஈரான் சுப்ரீம் தலைவர் Ayatollah Ali Khameneiக்கு எதிராகவும் கோஷமிடத் துவங்கினார்கள்.
மேலும் பொலிசாரைத் தள்ளிக்கொண்டு தூதரகத்தை நோக்கி மக்கள் முன்னேற முயன்றதைத் தொடர்ந்து பொலிசார் அவர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை சந்திப்பின்போது பிரான்ஸ் ஜனாதிபதி ஈரான் பிரதமர் Ebrahim Raisiஉடன் கைகுலுக்கிய விடயம் ஏற்கனவே கோபத்தை உருவாக்கியிருக்க, தற்போது பேரணியில் ஈடுபட்டோர் மீது கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டதால் சமூக ஆர்வலர்களின் கோபம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.