அமைதியாய் அழியும் உலகின் நுரையீரல்
இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் சனத்தொகை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் காடழிப்பும் இடம்பெற்று கொண்டே இருக்கிறது.
தற்போதைய சூழலில் காடழிப்பும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
காட்டு நிலங்களில் வேளாண்மை செய்தல், நகராக்கம் போன்ற காரணங்களுக்காகவும் காட்டு வளங்களை பெற்றுக் கொள்வதற்காக காட்டை வெட்டி நிலத்தை தரிசாக மற்றுவதும் காடழிப்பு எனப்படுகிறது.
முற்காலத்தில் காடழிப்பானது மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கும் அல்லது வேளாண்மை நிலங்களை உருவாக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில் புரட்சிக்கு பின்னர் நகராக்கமும் காட்டு வளங்களை சுரண்டலும் அதனுடன் இணைந்து கொண்டது என்றால் மிகையாகாது.
பொதுவாக குறிப்பிடத்தக்க பரப்பளவு காடுகளை அழிப்பதானது உயிரியல் பல்வகைமையையும் அழித்துவிடுகின்றமை சூழலுக்கு பெரும் சவாலான விடயமாகவுள்ளது.
பொதுவாக வளர்ந்துவரும் நாடுகளிலேயே காடழிப்பு பெருமளவில் இடம்பெறுகின்றது. இது புவியியல் மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றது.
பூகோளம் வெப்பமடைவதற்கு காரணம்
மனித முயற்சியுடனான காடழிப்பு ஒருபுறம் இருக்க மனிதனால் உணரப்படாமலேயே சில சமயங்களில் காடழிப்பு இடம்பெறுகின்றது.
உதாரணமாக கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம் புதிய மரக்கன்றுகள் உருவாவது தடுக்கப்படுவதனால் இயற்கையான காட்டின் மீலுருவாக்கம் தடைப்பட்டு மெதுவாக காடழிப்பு ஏற்படுகிறது.
அதுமட்டுமன்றி இயற்கையாக ஏற்படும் காட்டுதீ பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட காடுகளை சில நாட்களிலேயே அழித்துவிடுகிறது.
காடழிப்பு மனிதனாலும் இயற்கையாகவும் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணமே இருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் நாம் எதிர்பாராத அளவு மிகவும் மோசமானதாக இருக்கும்.
காடழிப்பு புவியை வெப்பமடைய செய்வதுடன் பச்சையக விளைவிற்க்கும் முக்கிய காரணமாக அமைகின்றது. வெப்ப மண்டல காடுகளை அழித்தல் சுமார் 20 சதவீதம் உலக பச்சையக வாயுக்களின் உருவாக்கத்திற்கு காரணமாக அமைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
மேலும் வெப்ப மண்டல பகுதிகளில் கரியமிலவாயு உமிழ்வுகளில் மூன்றில் ஒரு பங்கு காடழிப்பினாலேயே ஏற்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
காடழிப்பு கரியமில வாயுவை வளிமண்டலத்தில் தக்க வைக்கின்றது. இவ் வாயு வளிமண்டலத்தில் அதிகமாக சேரும் போது அது படலம் போல் படர்ந்து சூரிய கதிர்களை தக்க வைத்துக்கொள்கிறது.இந்த கதிர் வீச்சு வெப்பமாக மாறுவதனால் பூகோளம் வெப்பமடைவதற்கு காரணமாக அமைகின்றது.
இதுவே பச்சையக விளைவு என அழைக்கப்படுகின்றது. மேலும் காடழிப்பினால் அதிகளவான நீர் வழிந்தோடிவிடுவதனாலும் குப்பைகளினால் மண்ணின் பாதுகாப்பு குறைவதனாலும் மண்ணரிப்பு வீதம் வெகுவாக அதிகரிக்கின்றமை பாரிய பிரச்சினையாகவுள்ளது.
பல்லுயிரின இழப்பிற்கு முக்கிய காரணமாக அமைகின்றது
மேலும் பல்லுயிரின வளம் இல்லாமலாக்கபடுவதற்கு மனிதளவிலான காடழிப்பே காரணமாகும். மற்றும் உலக அளவில் பல இனங்களின் அழிவிற்க்கும் காரணமாக அமைகின்றது. காடுகள் உள்ள பகுதிகளை அகற்றுவதோ அல்லது அழிப்பதோ சூழல் சீர்கேட்டிற்கும் பல்லுயிரின இழப்பிற்கும் முக்கிய காரணமாக அமைகின்றது.
காடுகள் பல்லுயிரின வளத்தை அதிகரிப்பதுடன் வன விலங்குகளுக்கு வாழ்விடமாகவும் மருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் சிறந்த இடமாகவும் திகழ்கின்றது.
காடழிப்பின் காரணமாக மனிதனால் ஈடு செய்ய முடியாத அளவிற்கு மருத்துவ தாவரங்களின் மரபணு வேறுபாடுகள் அழிக்கப்டுக்கிறமை வருந்தத்தக்கது. உலகின் பிரபலமான பல்லுயிரின வளத்தில் 80 சதவீத உயிரினவளம் வெப்ப மண்டல காடுகளிலேயே காணப்படுகின்றது.
காடுகள் அழிக்கப்படுவதனால் பல்லுயிரின வளம் குறைவடைந்து சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகின்றது. காடழிப்பு காரணமாக நாள் ஒன்றுக்கு 137 தாவர விலங்கு மற்றும் பூச்சி இனங்கள் அழிக்கப்படுவதாகவும் ஆண்டுக்கு 50000 உயிரினங்கள் அழிந்துகொண்டிருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்றும் வளந்துவரும் நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்கள் வெப்பமூட்டுவதற்க்கும், சமையலுக்கும் விறகுகளை சார்ந்திருக்கிறார்கள். காடழிப்பானது பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகின்றது. காட்டு உற்பத்தி பொருட்களின் தொழில்துறை வளர்ந்த மற்றும் வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பங்கு வகிக்கின்றது.
குறுகிய கால நலன்களுக்காக காடுகளை வேளாண்மை நிலங்களாக மற்றுவதும் காடுகளிலிருந்து கிடைக்கும் மர பொருட்கள் அதிகமாக சுரண்டப்படுவதும் நீண்டகால வருமானம் மற்றும் உயிரியல் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகின்றது. மேலும் சட்ட விரோதமாக மரம் வெட்டுவதனால் ஆண்டு தோறும் தேசிய பொருளாதாரதிற்கு பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படுகின்றது.
எமது நுரையீரலின் பாதியை நாமே வெட்டுவதற்கு ஒப்பானது
மக்கள் தொகை பெருக்கம் காரணமாக வீடுகள், சமூகங்கள் மற்றும் நகரங்களின் விரிவாக்கம் போன்ற தேவைகள் அதிகரிகின்றமையும் காடழிப்பில் பெரும் பங்கு வாகிக்கின்றது. காடழிப்புக்கு இன்றைய அளவில் எண்ணிலடங்கா காரணங்கள் நாளுக்கு நாள் உருவாகிக்கொண்டே இருக்கின்றது.
ஆனால் காடழிப்பு என்பது வெறுமனே காடுகள் அழிவதை மட்டும் குறிப்பதில்லை மாறாக மனித இனத்தின் அழிவையே குறிக்கிறது என்பதை இன்று பல வளர்முக நாடுகளும் மறந்துவிட்டன. நாட்டின் அபிவிருத்திக்காகவும் நாகராக்க நடவடிக்கைகளுக்காகவும் காடுகளை அழிப்பது எமது நுரையீரலின் பாதியை நாமே வெட்டுவதற்கு ஒப்பானது.
உண்மையில் பாதி சுவாசம் நம்மிடமும் மீதி சுவாசம் தாவரங்களிடமும் தான் இருக்கிறது என்பதே மெய். நாம் வெளிவிடும் கபானீரொட்சைட்டை தாவரங்கள் சுவாசிக்கிறது. தாவரங்கள் வெளிவிடும் ஒட்சிசனை நாம் சுவாசிக்கின்றோம் இங்கு மனித இனம் நீடித்திருக்க வேண்டுமானால் உலகின் நுரையீரலாக தொழிட்படும் காடுங்களும் காக்கப்பட வேண்டியது அவசியம்.
காடுகளை காப்பதும் மரங்களை வளர்ப்பதும்
மனிதர்களாக பிறந்த எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். நமது சுவாசத்தை காக்க வேண்டுமானால் மனித குலத்துக்கே மூச்சு கொடுக்கும் காடுகளை காக்க வேண்டும் என்பதே உண்மை.