பிரான்சில் நிறுத்தப்பட்ட விமானம் விவகாரம்: பொலிஸ் விசாரணையில் தெரியவந்த திடுக் தகவல்கள்
ஆட்கடத்தல் நடப்பதாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியர்கள் பயணித்த விமானம் ஒன்று பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், திடுக்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்ட விமானம்
துபாயிலிருந்து நிகராகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று, தொழில்நுட்பக் காரணங்களுக்காக பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்டது. அப்போது, ஆட்கடத்தல் நடப்பதாக சந்தேகத்தின் பேரில் நான்கு நாட்களாக பிரான்ஸ் அதிகாரிகள் அந்த விமானப் பயணிகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த விமானத்தில் பயணித்த 303 பயணிகளில், 276 பேருடன் அந்த விமானம் மும்பை திரும்பியது.
அந்த விமானத்தில் பயணித்தவர்கள் அனைவருமே, இந்தியாவிலுள்ள பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய இரண்டே மாநிலைங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஆகவே, இரண்டு மாநில பொலிசாரும் அவர்களிடம் தனித்தனியே விசாரணைகளைத் துவக்கியுள்ளார்கள்.
விசாரணையில் தெரியவந்த திடுக் தகவல்கள்
அந்த பயணிகளில் 55 பேரிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த பயணிகள் அனைவரும் இந்தியாவிலிருந்து துபாய் சென்று, அங்கிருந்து நிகராகுவா நாட்டுக்குச் சென்று, அங்கிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் திட்டத்திலிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், அதற்காக அவர்களிடம் ஏஜண்டுகள் கேட்ட தொகை, இந்திய மதிப்பில் ஆளுக்கு 60 முதல் 70 லட்ச ரூபாய் என்றும், அவர்கள் அமெரிக்கா சென்ற பிறகு அந்த தொகையை செலுத்தினால் போதும் என அந்த ஏஜண்டுகள் கூறியதும் தெரியவந்துள்ளது.
அதைவிட ஆச்சரியம், அந்த ஏஜண்டுகள், அந்த பயணிகளுக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்ததுடன், செலவுக்கு ஆளுக்கு 1,000 முதல் 2,000 டொலர்கள் கொடுத்து அனுப்பியுள்ளார்கள்.
இதற்கிடையில், அந்த பயணிகளை அமெரிக்கா அனுப்ப ஏற்பாடு செய்த 15 ஏஜண்டுகளைக் குறித்த விவரங்களையும் பொலிசார் சேகரித்துள்ள நிலையில், விசாரணை பரபரப்பாக தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |