மீண்டும் சுவிட்சர்லாந்தை உலுக்கியுள்ள மெகா வங்கி ஊழல்... லீக்கான ஆவணங்களிலிருந்து தெரியவந்த அதிரவைக்கும் உண்மைகள்
சுவிஸ் வங்கி ஒன்று, பல பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான தவறான பணத்தைப் பதுக்கியுள்ளது குறித்து ஒரு செய்தி வெளியாகி மீண்டும் சுவிட்சர்லாந்தை உலுக்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, Credit Suisse bank என்னும் சுவிஸ் வங்கியில் பல பில்லியன் யூரோக்கள் சட்ட விரோத பணம் பதுக்கப்பட்டுள்ளதாக, அந்த வங்கியில் பணி புரியும் ஒருவரே செய்தி ஒன்றை கசிய விட, மீண்டும் சுவிஸ் வங்கி ஊழல் குறித்த செய்திகளால் பரபரப்பு உருவாகியுள்ளது.
Organized Crime and Corruption Reporting Project (OCCRP) என்னும் பெயரில், பிரான்சின் Le Monde மற்றும் பிரித்தானியாவின் The Guardian உட்பட, உலகம் முழுவதிலுமுள்ள 47 ஊடகங்கள் இணைந்து மேற்கொண்டுள்ள விசாரணையில், பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் ஓராண்டுக்கு முன், ஜேர்மனியின் Suddeutsche Zeitung என்ற செய்தித்தாளுக்கு ஒரு செய்தி கசிந்தது. அதன் அடிப்படையில் OCCRP மேற்கொண்ட விசாரணையில், Credit Suisse வங்கி, குற்றப்பின்னணி மற்றும் ஊழலில் தொடர்புடையவர்களின் பணத்தை பல ஆண்டுகளாக வைத்திருந்ததன் மூலம் சர்வதேச வங்கி விதிகளை மீறியது தெரியவந்துள்ளது.
வங்கியில் பணி புரியும் ஒருவர் மூலம் கசிந்த தகவல்களிலிருந்து, 1940ஆம் ஆண்டுக்கும், 2010ஆம் ஆண்டுக்கும் இடையில், 37,000 தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள், 18,000க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை Credit Suisse வங்கியில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுவரை வெளியானதிலேயே, பெரிய சுவிஸ் வங்கி ஒன்று தொடர்புடைய மிகப்பெரிய ஊழல் இது என OCCRP தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படும் விடயங்கள் மிகப்பழமையானவை என்று கூறி, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள Credit Suisse வங்கி, 1940களில் நடந்த விடயங்களை எல்லாம் இப்போது OCCRP வெளியிட்டுள்ளதாகவும், அது குறிப்பிட்டுள்ள வங்கிக்கணக்குகளில் 90 சதவிகிதம், ஊடகங்கள் அது குறித்து விசாரிக்க வங்கியை அணுகுவதற்கு முன்பே மூடப்பட்டுவிட்டதாகவும், அல்லது மூடப்படும் நிலையிலிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன், 60 சதவிகிதத்துக்கும் அதிகமான வங்கிக்கணக்குகள் 2015க்கு முன்னரே மூடப்பட்டுவிட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் குறித்து தெரிவித்துள்ள OCCRP, அவர்களில் பலர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்றும், உதாரணமாக, சித்திரவதைக்கு பேர் போன ஏமன் நாட்டு உளவாளி ஒருவர், அசர்பைஜான் நாட்டு பிரபலம் ஒருவரின் மகன்கள் இருவர், செர்பியா நாட்டு போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஒருவர், வெனிசுலா நாட்டு எண்ணெய் வளத்தைச் சூறையாடிய பிரபலங்கள் என அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
அந்த வகையில், 7 பில்லியன் யூரோக்கள் Credit Suisse வங்கியில் ஊழல்வாதிகளின் பணம் வைப்பு வைக்கப்பட்டதாக OCCRP தெரிவிக்கிறது.
Credit Suisse சுவிட்சர்லாந்தில் இரண்டாவது மிகப்பெரிய வங்கி என்பதும், ஓராண்டுக்கு முன் இதேபோல வரிசையாக பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவ்வங்கி சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.