பிரான்சில் பிரித்தானிய குடும்பத்தை சுட்டுக்கொன்ற மர்ம நபர்... ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் கைது
பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய குடும்பம் ஒன்று பயணித்த காரை நோக்கி, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
அந்த துப்பாக்கிச் சூட்டில் காரிலிருந்த பிரித்தானியக் குடிமகனான Saad al-Hilli (50), அவரது மனைவி Iqbal (47) மற்றும் தாயார் Suhaila Al-Allaf (74) ஆகியோரும், அவ்வழியே சைக்கிளில் சென்றுகொண்டிருந்த Sylvian Mollier (45) என்ற பிரான்ஸ் நாட்டவரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில், தோளில் குண்டு பாய்ந்திருந்த மூத்த குழந்தையான Zainabb (7) என்ற குழந்தையும், கொல்லப்பட்ட தாய் Iqbalஇன் கால்களுக்கிடையில் பயந்து நடுங்கிக்கொண்டு ஒளிந்திருந்த இரண்டாவது குழந்தையான Zeena (4)ம் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஒரு முக்கியமான விடயம், இந்த சம்பவம் நடந்தது 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி.
நீண்ட விசாரணைக்குப்பின்பும் குற்றவாளி சிக்கவேயில்லை.
சம்பவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகள், குழந்தைகளான Zainabம் Zeenaவும் மட்டுமே.
இந்நிலையில், சம்பவம் நடந்து ஒன்பது ஆண்டுகளாகிவிட்ட நிலையில், நேற்று, பிரான்ஸ் பொலிசார் சந்தேகத்துக்குரிய பிரான்ஸ் நாட்டவரான ஒருவரைக் கைது செய்துள்ளார்கள்.
அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பிரித்தானியாவிலுள்ள Bournemouthஇல் வாழும் Saad al-Hilliயின் சகோதரரான Zaid al-Hilli (62), இந்த கைது சம்பவம் குறித்துக் கூறும்போது, இம்முறையாவது நீதி நிலை நிறுத்தப்படும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
ஆனாலும், இந்த கைது சம்பவத்தை இப்போதைக்கு தான் அப்படியே நம்பிவிடப்போவதில்லை என்றும், பிரான்ஸ் பொலிசார் தாங்கள் இன்னமும் அந்த வழக்கு தொடர்பில் வேலை செய்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக எடுக்கப்பட்ட கைது நடவடிக்கையாக அது இருக்காது என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காரணம், இதே வழக்குக்காக இதுவரை பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவிட்டார்கள்.
ஆனால், இதுவரை யார் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. அப்படி கைது செய்யப்பட்ட ஒருவர், மன உளைச்சல் காரணமாக, கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட ஒரு பரிதாபமும் நிகழ்ந்தது.
சொல்லப்போனால், Zaid al-Hilli கூட ஒரு முறை சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.