பிரான்சில் Omicron வைரஸைத் தொடர்ந்து தலைப்புச் செய்தியாகியுள்ள வைரஸ்: எவ்வளவு ஆபத்தானது?
Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸைத் தொடர்ந்து, தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் ஒன்று உலகின் கவனம் ஈர்த்துள்ள நிலையில், அது குறித்த சில தகவல்களை அறிந்துகொள்வோம்.
தெற்கு பிரான்சிலுள்ள Marseille நகரில் புதிதாக ஒரு வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது அபாயகரமானதா? உண்மையாகவே புதிய வைரஸா என்பது குறித்து பார்க்கலாம்.
அது உண்மையாகவே புதிய வைரஸா?
B.1.640.2 என அழைக்கப்படும் அந்த கொரோனா வைரஸ், நவம்பர் மாதம் Marseille நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. டிசம்பர் 9 அன்று, அது புதிய மரபணு மாற்ற கொரோனா வைரஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பெயர் என்ன? ஏன் அந்த பெயரிடப்பட்டது?
Marseilleஇல் உள்ள The Institut Hospitalo-Universitaire என்ற ஆய்வகத்தில்தான் இந்த புதிய கொரோனா வைரஸின் மரபணு அமைப்பு குறித்த விவரங்கள் கண்டறியப்பட்டன.
ஆகவே, அந்த நிறுவனத்தின் பெயரால், அந்த வைரஸ் IHU மரபணு மாற்ற கொரோனா வைரஸ் என அழைக்கப்படுகிறது. (இணைய பயனர்கள் அதை வேடிக்கையாக ‘I Hate U’ வைரஸ் என அழைக்கிறார்கள்.
இந்த மரபணு மாற்ற வைரஸில், 46 திடீர் மாற்றங்கள் காணப்படுவது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
அது எங்கிருந்து தோன்றியது?
இந்த புதிய வைரஸ் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மட்டுமே, அது பிரான்சில் உருவானது என்று கூறிவிடமுடியாது. பிரான்ஸ் வைரஸ்களை சோதித்து மரபியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் வசதி கொண்டது என்பதால்கூட, அது அங்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
காங்கோ குடியரசிலிருந்து சமீபத்தில் பிரான்சுக்கு திரும்பிய ஒரு பயணியிடம்தான் முதன்முதலாக இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மற்ற 11 பேரும் அந்த பயணியுடன் தொடர்புடையவர்கள்தான்.
பிரான்சில் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள அதே நேரத்தில், காங்கோ நாட்டிலும், பிரித்தானியாவிலும், மேலும் ஆப்பிரிக்காவின் பல பாகங்களிலும், வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், தெற்காசியாவிலும் பலருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் எவ்வளவு அபாயகரமானது?
IHUவில் இந்த வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள், இப்போதுதான் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் வைரஸ் அமைப்பு, தொற்றும் திறன் மற்றும் அது நோயாளியின் உடலில் எவ்வித மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்பது போன்ற விடயங்களைக் குறித்து தெரிவிப்பது கடினம் என்கிறார்கள்.
ஆனால், அது குறிப்பிட்ட அளவில் மெதுவாகவே பரவியிருப்பது ஆறுதலை அளிப்பதாக உள்ளது. பிரான்சைப் பொருத்தவரை, இந்த வைரஸ், ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே கொரோனா தொற்றை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், Omicron வகை கொரோனா வைரஸோ, டெல்டா வகை வைரஸையே முந்திவிட்டது.
உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வைரஸை கண்காணித்து வருவதாகவும், இப்போதைக்கு அது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வைரஸ் என நிரூபிக்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பின் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.