இரவு நேரங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன... சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தல் காவல் மையங்களில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் கருத்து
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தல் காவல் மையங்களில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள், தாங்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக உணர்வதில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர்களில், நாடு கடத்தப்படுவதற்காக காத்திருப்போர் காவல் மையங்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால், அந்த காவல் மையங்கள் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பற்றவையாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
சிறு பிள்ளைகள் வெளி உலகத்துடன் தொடர்பே இல்லாத வகையில் சிறிய அறைகளில் அடைக்கப்பட்டுள்ளது, அங்கு ஆய்வு மேற்கொண்டபோது தெரியவந்துள்ளது.
நேற்று Aarwangen, Biel மற்றும் Gampelen ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காவல் மையங்களில் ஆய்வு மேற்கொண்ட சித்திரவதை தடுப்பு தேசிய ஆணையம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு கட்டிடங்களின் உள்கட்டமைப்பு மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்த மையங்கள், சிறுவர்களில் உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைக்கிணங்க அமைந்திருக்கவில்லை என்று கூறியுள்ளார் ஆணையத்தின் தலைவரான Regula Mader.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான குளியலறைகள் இருப்பதாக தெரிவித்துள்ள ஆணையம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக குளியலறைகள் அமைக்கப்படவேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
ஆய்வு மேற்கொண்டவர்களிடம் பேசிய பெண்கள், பொதுவான அந்த தங்குமிடங்களில் இரவு நேரங்களில் பாதுகாப்பாக உணர முடியவில்லை என தெரிவித்துள்ளார்கள்.
தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளோரை தங்கவைப்பதில் உள்ள பிரச்சினைகளை புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆணையம், Bern மாகாணத்தில் உள்ள மையங்களில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.