பிரித்தானியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 100,000ஐத் தாண்டியது
பிரித்தானியாவில் முதன்முறையாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 100,000ஐத் தாண்டிவிட்டதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று, புதன்கிழமை நிலவரப்படி, ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 106,122 என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
டிசம்பர் 15க்குப் பிறகு, தொடர்ச்சியாக கொரோனா தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 8,008 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நவம்பர் 22ஆம் திகதிக்குப் பிறகு இத்தனை பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது இப்போதுதான்.
இந்நிலையில், இங்கிலாந்தில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குமுன் புதிய கட்டுப்பாடுகள் எதையும் அறிவிக்கப்போவதில்லை என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், Omicron வைரஸ் வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.