ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தாயிற்று: எச்சரிக்கும் பிரித்தானிய சுகாதாரச் செயலர்
ரஷ்ய டாங்குகள் மற்றும் ட்ரக்குகள் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உலாவரும் காட்சிகள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தாயிற்று என பிரித்தானிய சுகாதாரச் செயலரான சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் உத்தரவின் பேரில், அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகள் என்ற பெயரில், ரஷ்ய டாங்குகள் மற்றும் ட்ரக்குகள் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உலாவருகின்றன.
புடின் குடியரசுகளாக அறிவித்துள்ள உக்ரைன் நகரங்களில் ஒன்றான Donetskஇல், இன்று காலை இராணுவ வாகனங்கள் பல உலாவருவது தெரியவந்துள்ளது. அவை எந்த நாட்டு இராணுவ வாகனங்கள் என்பதைக் காட்டும் அடையாளங்கள் எதுவும் அவற்றில் இல்லை. என்றாலும், அவை ரஷ்ய வாகனங்களாக இருக்கும் என கருதப்படுகின்றது.
அத்துடன், ரஷ்ய ஆதரவு படைகள் உக்ரைன் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஐரோப்பாவில் இருளான ஒரு நாள் இது என்று கூறியுள்ள சாஜித் ஜாவித், புடின் ஏற்கனவே கிழக்குப் பகுதிகள் சிலவற்றை அங்கீகரித்துள்ளதுடன், அங்கு இராணுவத்தையும் டாங்குகளையும் அனுப்பியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதையும் பார்க்கும்போது, உக்ரைன் ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டது என்ற முடிவுக்கு நாம் வர முடியும் என்றார்.
அத்துடன், உக்ரைனின் ரஷ்ய படைகள் நடமாட்டம் குறித்து பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்யாவுக்கெதிரான முதல் கட்ட தடைகள் தயாராகிவிட்டன என்றும், அவை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் தெரிவித்தார். ஆனாலும், அவர் சாஜித் ஜாவித்தைப் போல ஆக்கிரமிப்பு துவங்கிவிட்டது என்ற பதங்களை பயன்படுத்தவில்லை.