Omicron கொரோனா அலை மிதமாகத்தான் இருக்கும்... நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள ஐந்து காரணங்கள்
பிரித்தானியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையிலும், கொரோனா தொற்றுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலர், வேறு உடல் நல பிரச்சினைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றவர்கள் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகே அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், Omicron கொரோனா அலை மிதமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை அமைச்சர்களுக்கு உருவாகியுள்ளது.
Omicron கொரோனா அலை மிதமாகத்தான் இருக்கும் என்பதால், மருத்துவமனைகள் அதிக அழுத்தத்திற்குள்ளாக வாய்ப்பில்லை என்றும், அதனால் மேலும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்க தேவையில்லை என்றும் பிரித்தானிய அமைச்சர்கள் நம்புகிறார்கள்.
அப்படி ஒரு நம்பிக்கை ஏற்பட்டதற்கு ஐந்து காரணங்களைக் கூறலாம்.
அவையாவன...
1. மருத்துவமனைகளில் கொரோனாவுடன் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் கொரோனாவுக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் இல்லை
தற்போது இங்கிலாந்தில் கொரோனாவுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9,546.
ஆனால் விடயம் என்னவென்றால், இந்த எண்ணிக்கையில் கொரோனா தொற்றுக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனாவுடன் மருத்துவமனையில் இருப்பவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை தனித்தனியாக பிரிக்கப்படவில்லை.
Omicron வகை கொரோனா பரவல், மற்ற வகை கொரோனா வைரஸ்களை மிஞ்சியதற்குப் பின், இதுபோன்ற வேறு காரணங்களுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டபின் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து அடிபட்டவர்கள் போன்றவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்த்தால், கொரோனா இருப்பது தெரியவருகிறது. அதாவது அவர்கள் சாதாரணமாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு வெளியே தெரியும் அளவுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை.
ஐந்தில் நான்கு பேர் வரை இப்படித்தான் இருக்கிறார்களாம்.
2. கொரோனா தொற்று எண்ணிக்கை சீராகத் தொடங்கியுள்ளது
பிரித்தானியாவில் டிசம்பரில் Omicron வகை கொரோனா அதிகமாக பரவத்தொடங்கியதையடுத்து, புத்தாண்டு வாக்கில் கொரோனா பரவல் எக்கச்சக்கமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனாவுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை சீராகத் துவங்கியுள்ளது.
3. மருத்துவமனைகளில் கொரோனா காரணமாக அனுமதிக்கப்படும் காலகட்டம் குறைந்துள்ளது
கடந்த குளிர்காலத்தில் இருந்தது போல், தற்போது அதிக அளவிலான நோயாளிகளை தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு கொண்டுசெல்லப்படவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்கிறார்கள் பிரித்தானிய மருத்துவர்கள்.
அத்துடன், சீக்கிரமாகவே நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிடுகிறார்கள். சராசரியாக மூன்று நாட்கள் மட்டுமே அவர்கள் மருத்துவமனையில் தங்கியிருகிறார்கள்.
முந்தைய வகை கொரோனா வைரஸ்களைவிட Omicron வகை கொரோனா வைரஸ் தீவிரம் குறைந்ததாக உள்ளதே இதற்கு காரணம் என்னும் ஆய்வு முடிவுகளுடன், இந்த விடயமும் ஒத்துப்போகிறது.
4. தடுப்பூசிகள் இன்னமும் வேலை செய்கின்றன
கொரோனா பரவலைத் தடுக்கும் திறனை Omicron வைரஸ் குறைத்திருந்தாலும், கொரோனா தடுப்பூசிகள் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை பெருமளவில் தடுக்கும் திறன் கொண்டவையாகவே இருக்கின்றன.
லண்டனைப் பொருத்தவரை, Omicron தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பத்து நோயாளிகளில் நான்கு பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெறாதவர்களே. அத்துடன், கிட்டத்தட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட அனைவருமே தடுப்பூசி பெறாதவர்கள்தான்.
5. கொரோனாவால் மரணம் நிகழ்வது குறைவாகவே உள்ளது
நேற்று இது குறித்து பேசிய ஆக்ஸ்போர்டு பல்கலை பேராசிரியரான Sir John Bell, கொரோனாவால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்படுவது இப்போது வரலாறு ஆகிவிட்டது (அதாவது, அதெல்லாம் பழங்கதை, இப்போது அப்படியில்லை என்று பொருள்) என்றே கூறிவிட்டார்.
நேற்று 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளர்கள். சராசரியாக நாளொன்றிற்கு 84 பேர். இதுவே, ஜனவரியில் சராசரியாக நாளொன்றிற்கு 1,000 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, மேற்கூறிய காரணங்களால் பிரித்தானியாவில் கொரோனா தொற்று மிதமாகத்தான் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை உருவாகியுள்ளது.