பனிப்பாறைச் சரிவில் சிக்கிய நபர்... இரண்டரை மணி நேரத்துக்குப்பின் மீட்புக்குழுவினர் கண்ட ஆச்சரிய காட்சி
பனிக்குள் புதைந்த ஒருவர் 20 நிமிடம் தாண்டினாலே பிழைப்பது அபூர்வம், அப்படியிருக்கும் நிலையில், பனிக்குள் புதைந்து இரண்டரை மணி நேரத்துக்குப்பின் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த ஆச்சரிய சம்பவம் பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதியில் நடந்தேறியுள்ளது. 50 வயது நபர் ஒருவர் தன் குடும்பத்துடன் ஆல்ப்ஸ் மலையில் பனியின்மீது நடந்து சென்றுகொண்டிருக்கும்போது பனிப்பாறைச் சரிவில் சிக்கி பனியில் புதைந்துள்ளார்.
அவரைத் தேடும் முயற்சியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையிலும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
காரணம், அவர் எட்டு அடி ஆழத்தில் புதைந்துள்ளார். பின்னர், அவரது மொபைல் போனை ஒரு கருவியின் உதவியால் ட்ராக் செய்து அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
2 மணி நேரம் 40 நிமிடங்களுக்குப் பிறகுதான் அவரை மீட்க முடிந்துள்ளது. பனிக்குள் புதைந்த ஒருவர் 20 நிமிடம் தாண்டினாலே பிழைப்பது அபூர்வம் என்றிருக்கும் நிலையில், அவர் தப்பியது ஒரு அதிசயம்தான் என்கிறார்கள் மீட்புக் குழுவினர்.
பனிப்பாறைச் சரிவில் சிக்கிய அவர் ஒரு மரத்தில் சென்று மோதியதால், இழுத்துச் செல்லப்படாமல் அந்த இடத்திலேயே அசையாமல் இருந்துள்ளார்.
அவரது இடுப்பெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது என்றாலும், அவர் முழுமையாக உடல் நலம் தேறிவிடுவார் என்று கூறியுள்ளனர் மருத்துவர்கள்.