சிகிச்சைக்காக தாயை கனடாவுக்கு அழைத்துவர லொட்டரியை நம்பியிருந்த நபர்: கனடா எடுக்கவிருக்கும் நடவடிக்கை
தன் தந்தை புற்றுநோயால் இறந்துபோன நிலையில், தன் தாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக கனடாவின் லொட்டரி திட்டம் ஒன்றை நம்பியிருந்தார் ஒருவர்...
அவரது பெயர் Ken Yu (38)
ஒரு சர்வதேச மாணவராக கனடாவுக்கு வந்து, இப்போது கால்கரியில் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார் Ken.
லொட்டரி விழும் என ஆறு ஆண்டுகளாக Ken காத்திருந்தும் அவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கவில்லை...
அதாவது இந்த லொட்டரி, பணம் பரிசாகக் கிடைக்கும் லொட்டரி அல்ல! கனடாவில் வாழும் வெளிநாட்டவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை கனடாவுக்கு அழைத்து வர விரும்பும் பட்சத்தில், அவர்களது பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை கனடாவுக்கு அழைத்து வரலாம்.
இப்படி ஒரு விநோதமான நடைமுறை இருந்து வருகிறது கனடாவில்... அதனால் என்ன பாதிப்பு என்றால், யாருக்கு அவசரமாக சிகிச்சை தேவைப்படுகிறது என்பதெல்லாம் கருத்தில் கொள்ளப்பட்டாமல், குருட்டாம்போக்கில் குலுக்கல் முறையில் யாராவது தேந்தெடுக்கப்படுவார்கள்.
இதனால், சில நேரங்களில் அவசர சிகிச்சை தேடுவோர் பின்தங்கியிருக்க, வேறு யாரோ ஒரு அதிர்ஷ்டசாலி கனடா வர தேர்வு செய்யப்படுவார்.
இப்படிப்பட்ட ஒரு நிலைமை இருந்த நிலையில், தற்போது, இந்த குளறுபடிகளை சரி செய்யும் விதத்தில், கனடாவில் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
ஆம், குடும்பங்கள் ஒன்றிணைவதை எளிதாக்க, இந்த லொட்டரி திட்டம் மூலம் மக்கள் ஏமாற்றம் அடைவதைத் தவிர்க்க, கனடா ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வர இருக்கிறது.
அந்த சட்டத்தின்படி, தற்காலிக விசாவுக்கு விண்ணப்பிக்கும் கனேடிய குடிமகன் ஒருவருடைய பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி, வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனம் ஒன்றின் மூலம் காப்பீடு பெறும் பட்சத்தில், அவர்கள் கனடாவில் ஐந்து ஆண்டுகள் வரை தங்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.
Reuniting Families Act, Bill C-242 என்று அழைக்கப்படும் அந்த சட்டம் நிறைவேற்றப்படுமானால், சிகிச்சைக்காக கனடா வரும் கனேடிய குடிமகன் ஒருவருடைய பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி, கனடாவுக்கு வெளியிலிருந்து தனியார் மருத்துவக் காப்பீடு ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டு, அவர்கள் கனடாவில் ஐந்து ஆண்டுகள் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், தங்கள் குடும்பத்துடன் இணைவதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் Ken உட்பட ஏராளமானோருக்கு அது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.