உக்ரைன் போரால் ஜேர்மனியில் வாழும் ரஷ்யர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
ரஷ்யா உக்ரைனை ஊடுருவிய நாள் முதல், ஜேர்மனியில் வாழும் ரஷ்ய பின்னணி கொண்டவர்கள், பள்ளிகளிலும், பொதுப்போக்குவரத்திலும் அன்றாடம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளத்துவங்கியுள்ளார்கள்.
ஜேர்மனியில் சமூக சேவகராக இருக்கும் Roman Friedrich என்பவர், புடின் தொடர்ந்துள்ள போருக்காக ஜேர்மனியில் ரஷ்ய பின்னணிகொண்டவர்கள் குற்றம்சாட்டப்படுவதாக தெரிவிக்கிறார்.
அதிர்ச்சியளிக்கும் விதமாக, ஜேர்மன் ஆரம்பப் பள்ளி ஒன்றில், ஆசிரியை ஒருவர் ரஷ்யக் குழந்தை ஒன்றை மற்ற மாணவர்களுக்கு முன்னாக எழுப்பி நிற்கவைத்திருக்கிறார்.
மற்றொரு பள்ளியில், ரஷ்ய மாணவன் ஒருவனைப் பிடித்து வைத்து அடித்துத் துவைத்திருக்கிறார்கள் மற்ற மாணவர்கள்.
போலந்து நாட்டுப் பெண் ஒருவரை ரஷ்யப் பெண் என்று தவறாக கருதி, கடை ஒன்றில் அவமதித்திருக்கிறார்கள் சிலர். அனுதினமும், பணித்தலங்களிலும், பொதுப்போக்குவரத்திலும், பள்ளி விளையாட்டு மைதானங்களிலும் ரஷ்யப் பின்னணி கொண்டவர்கள் தொல்லைகளுக்குள்ளாகிறார்கள்.
ஜேர்மனியில், ரஷ்ய மொழி பேசுவோர் சுமார் 6 மில்லியன் பேர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் ஜேர்மன் குடியுரிமை பெற்றவர்கள்.
ஆனாலும், இவ்வளவு காலமாக இல்லாத வகையில், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதைத் தொடர்ந்து ஜேர்மனியில் ரஷ்யர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருகிறது.
கவலைக்குரிய விடயம் என்னெவென்றால், குழந்தைகளும் குறிவைக்கப்படுவதுதான்...
Narina Karitzky என்பவர் Bonn நகரில் ரஷ்ய மொழிப் பள்ளி ஒன்றை நிறுவி 2011 முதல் நடத்தி வருகிறார். சுமார் 500 குடும்பங்கள் அந்தப் பள்ளியால் பயனடைந்துவரும் நிலையில், தற்போது அந்தப் பள்ளி மீது கோபத்தைக் காட்டத் துவங்கியுள்ளார்கள் ஜேர்மானியர்கள்.
ஆக மொத்தத்தில், புடினுடைய நாடு பிடிக்கும் ஆசை, அவரது நாட்டு மக்களுக்கே தொல்லையாகத் துவங்கியுள்ளது.