ரஷ்யாவால் ஆறு மில்லியன் பிரித்தானிய வீடுகள் சந்திக்கவிருக்கும் பிரச்சினை: அமைச்சர்கள் எச்சரிக்கை
ரஷ்யாவுடனான பிரச்சினை தொடருமானால், ஆறு மில்லியன் பிரித்தானிய வீடுகள் மின்தடை பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என பிரித்தானிய அமைச்சர்கள் எச்சரித்துள்ளார்கள்.
ரஷ்யா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எரிவாயு வழங்கலை நிறுத்துமானால், நிலைமை மோசமாகும் பட்சத்தில், மின்சார வழங்கலுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும்.
இப்படி ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானிய தொழில்கள் செயலரான Kwasi Kwarteng, பிரித்தானியாவின் நிலக்கரி மின் உற்பத்தி மையங்களை மூடும் திட்டத்தை தாமதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தொழில்கள் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் பேசும்போது, பிரித்தானியாவில் எரிவாயு அல்லது மின் வழங்கள் தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அப்படி ஏதாவது பிரச்சினை உருவாகும் பட்சத்தில், அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா ரஷ்யாவிடமிருந்து மிகக் குறைவான அளவிலேயே எரிவாயு மற்றும் எண்ணெய் வாங்கினாலும், புடின் எரிவாயு வழங்கலை நிறுத்தும் பட்சத்தில், பிரித்தானியாவும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் எரிவாயு மற்றும் எண்ணெய்க்காக போட்டி போடவேண்டியிருக்கும்.
அப்படி ஒரு தட்டுப்பாடு ஏற்படுமானால், பிரித்தானியாவிலுள்ள ஆறு மில்லியன் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை ரேஷன் முறையில் வழங்கவேண்டிய ஒரு நிலை, ஒரு மாதம் வரை, அல்லது அதற்கு கூடுதலாகவே ஏற்படலாம் என அமைச்சர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், வார இறுதி நாட்களில், காலை 7.00 முதல் 10.00 மணி வரையும், மாலை 4.00 முதல் 9.00 மணி வரையும் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும், எரிவாயு வழங்கல் தடைசெய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு படி கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ரஷ்யா வழங்கும் மொத்த எரிவாயு வழங்கலையும் அந்நாடு நிறுத்துமானால், மூன்று மாதங்களுக்கு வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மின் வழங்கலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.