பிரித்தானியர்களில் சிலர் அதிகம் சினிமா பார்ப்பதுதான் பிரச்சினை: சீனப்பெண் உளவுபார்த்த விவகாரம் குறித்து நக்கலடிக்கும் சீனா
பிரித்தானியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் தொடர்பு வைத்துள்ள சீனப்பெண் ஒருவர், சீன அரசின் உளவாளி என பிரித்தானிய உள்நாட்டு உளவு ஏஜன்சி எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Christine Lee (58) என்ற சீனப்பெண், பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நிற்கும் புகைப்படங்களை சர்வசாதாரணமாக காணலாம்.
பிரித்தானிய முன்னாள் பிரதமர்களான டேவிட் கேமரான், தெரஸா மே மற்றும் முன்னாள் லேபர் கட்சித் தலைவர் ஜெரமி கார்பின் என பல அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறார் இந்த Christine Lee.
அத்துடன், லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான Barry Gardinerஉடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட அவர், Gardinerக்கு 500,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக நன்கொடையும் வழங்கியிருக்கிறார்.
இந்நிலையில், அவர் ஒரு உளவாளி என பிரித்தானிய உள்நாட்டு உளவு ஏஜன்சியான MI5 நாடாளுமன்ற சபாநாயகருக்கு தகவலளித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தப் பெண்ணைக் குறித்து கவனமாக இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Christine Lee சீன அரசின் உளவாளி என்னும் குற்றச்சாட்டை மறுத்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், அது சில தனிப்பட்ட நபர்களின் ஊகம் (assumption) என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் பிரித்தானியாவை கேலி செய்துள்ளார்.
சிலர் அதிக அளவில் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் பார்த்திருக்கலாம். உளவாளி சினிமாக்கள் அதிகம் பார்த்ததால்தான் அவர்களுக்கு இப்படி தேவையில்லாமல் நடக்காதவைகளை நடந்ததுபோல் நினைத்துக்கொள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது, (சீனா உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்) என கேலி செய்துள்ளார் அவர்.