உக்ரைன் ஊடுருவல் கற்றுக்கொடுத்த பாடம்: ஜேர்மனியில் மீண்டும் அறிமுகமாகவிருக்கும் திட்டம்
உக்ரைன் போர், அமைதி என்பது இயற்கையின் விதி அல்ல என்பதைக் காட்டியுள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் கட்டாய இராணுவ சேவை திட்டத்தை அறிமுகம் செய்ய ஜேர்மன் அரசு திட்டமிட்டு வருகிறது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த திட்டத்துக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholz, ஜேர்மனியின் பாதுகாப்புக்காக கூடுதல் தொகை ஒதுக்க உறுதிபூண்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு வரை, வயதுவந்த ஜேர்மன் ஆண்கள் அனைவரும் ஓராண்டு கட்டாயம் இராணுவத்தில் சேவை செய்யவேண்டும் அல்லது குறிப்பிட்ட சில சேவைத்துறைகளில் அரசுப் பணி செய்யவேண்டும் என்ற நடைமுறை இருந்துவந்தது.
அந்த நடைமுறை, சட்டம் ஒன்றின் மூலம் பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும், போர் அல்லது அத்தியாவசிய காலகட்டங்களில் மீண்டும் அந்த நடைமுறை கொண்டுவரப்படலாம் என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், திடீரென உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பரபரப்பைத் தொடர்ந்து, தாங்களும் எதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதற்காக, மீண்டும் கட்டாய இராணுவ சேவைத் திட்டத்தைக் கொண்டுவர ஜேர்மனி திட்டமிட்டு வருகிறது.
சொல்லப்போனால், ஆளும் Scholzஇன் கட்சியான SPD party, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கட்டாய இராணுவ சேவை செய்யும் திட்டம் ஒன்றைக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.