ஓபரா பேட்டியில் ஹரி மேகன் பொய் சொன்னதை உறுதி செய்யும் ஆதாரம் இதுதான்: வெளியான சான்றிதழ்
தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தேவாலயத்தில் திருமணம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, தனிப்பட்ட முறையில், தாங்கள் தங்கள் வீட்டுக்குப் பின்னாலேயே இங்கிலாந்து சபைத் தலைவர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டதாக ஓபரா பேட்டியின்போது ஹரியும் மேகனும் கூறிய விடயம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அப்படியானால், இன்னொரு முறை திருமணம் செய்துகொண்டு ஏன் மக்களின் வரிப்பணத்தை வீணாக்கினீர்கள் என கொதித்தார்கள் மக்கள்.
ஆனால், திருச்சபைத் தலைவர் சார்பில் அப்படி ஒரு திருமணமே நடக்கவில்லை என விளக்கமளிக்கப்படவே, வேறு வழியில்லாமல், தாங்கள் திருமணத்துக்கு மூன்று நாள் முன்பு திருமணம் செய்துகொள்ளவில்லை, எங்களுக்குள் திருமண வாக்குறுதிகளை பகிர்ந்துகொண்டோம் அவ்வளவுதான் என ஹரி மேகனின் செய்தி தொடர்பாளர் மெதுவாக ஒரு செய்தியை வெளியிட்டார்.
அது மக்களை மேலும் கோபப்படுத்தியது, திருமணம் குறித்த செய்தியே பொய்யானால், ஓபரா பேட்டியில் ஹரியும் மேகனும் சொன்ன எந்த விடயத்தை நம்புவது என திரும்பவும் கோபப்பட்டார்கள் மக்கள்.
இதற்கிடையில் ஹரி மேகன் திருமண செய்தியை உறுதி செய்யும் திருமணச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.
அதில், 2018ஆம் ஆண்டு, மே மாதம் 19ஆம் திகதிதான் பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும், மேகனுக்கும் திருமணம் நடந்தது என தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
மேன்மை தங்கிய இளவரசர் ஹரிக்கும், ரேச்சல் மேகன் மெர்க்கலுக்கும் 2018ஆம் ஆண்டு, மே மாதம் 19ஆம் திகதி திருமணம் நடந்தது என அந்த அதிகாரப்பூர்வ சான்றிதழ் தெரிவிக்கிறது.
மேலும், அந்த சான்றிதழில், 33 வயதான ஹரி திருமணமாகாதவர், ஐக்கிய ராஜ்ஜியத்தின் இளவரசர் என்றும், 36 வயதான மேகனுடைய பெயருக்கு நேராக, விவாகரத்தானவர், நடிகர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


