அமைதியாக இருங்கள்... நான் பார்த்துக்கொள்கிறேன்: ஹரி மேகன் பேட்டி பிரச்சினையை தீர்க்க மகாராணியார் எடுத்துள்ள முடிவு
அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் கொடுத்த பேட்டி நாட்டையே கோபத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அதனால் குடும்பத்துக்குள் உண்டான பிரச்சினையை சுமூகமாக தீர்க்க மகாராணியார் முடிவு செய்துள்ளார்.
மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் அந்த பேட்டி ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட இயலாமல் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில், அவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் மகாராணியார்.
எந்த பிரச்சினையையும் பொறுமையாக கையாளும் அனுபவம் வாய்ந்தவரான பிரித்தானிய மாகாராணியார், தானே நேரடியாக ஹரியிடம் பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அரண்மனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூட, மகாராணியாரின் மென்மையான அணுகுமுறையைக் காண முடிந்தது.
“கடந்த சில ஆண்டுகள் ஹரிக்கும் மேகனுக்கும் எவ்வளவு சவால் மிகுந்தவையாக இருந்தன என்பதை அறிந்து மொத்த ராஜ குடும்பமும் கவலையடைந்துள்ளது.
குறிப்பாக இனரீதியான அந்த பிரச்சினை கவலையளிப்பதாக உள்ளது. சில விடயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், அவை சீரியஸாக எடுத்துக்கொள்ளப்பட்டு தனிப்பட்ட முறையில் அவை குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும்.
ஹரி, மேகன் மற்றும் ஆர்ச்சி ஆகிய மூவரும் எப்போதுமே ராஜ குடும்ப உறுப்பினர்களால் பெரிதும் நேசிக்கப்படுவார்கள்” என்று ஆங்கிலத்தில் 61 வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்த அந்த அறிக்கையில், ஒரு வார்த்தையைக் கூட கடினமானது என கூறமுடியாது.
அந்த அறிக்கைக்கும், அது வெளியிடப்படுவதற்கு முன் ஓபரா பேட்டியில் கூறப்பட்ட விடயங்களுக்கும் எவ்வளவு முரண்பாடு உள்ளது என்பதிலிருந்தே மகாராணியாரின் அன்பும் அனுபவமும் புரியவரும்.
ஒரு பக்கம், ஏற்கனவே அந்த அறிக்கை வெளியாகிவிட்டது, மறுபக்கம், அந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அது குறித்து ஹரி மேகன் தம்பதிக்கு தெரியப்படுத்தப்பட்டுவிட்டது.
என்றாலும், அதுவும் போதாதென கருதும் மகாராணியார், தானே தனிப்பட்ட முறையில் தன் பேரனுடன் பேச முடிவு செய்துள்ளதிலிருந்து, அவருக்கு ஹரி மீதிருக்கும் அன்பும் பாசமும் மட்டுமின்றி, இரு தரத்தாருக்கும் இடையிலுள்ள பிளவை சரிசெய்யவேண்டும் என்ற அவரது ஆசையும் வெளிப்படுவதை தெள்ளத்தெளிவாக உணர முடிகிறது.



