தங்க கட்டி என கருதி வீட்டுக்கு எடுத்து வந்த கல்: ஆய்வில் தெரியவந்த அதிரவைக்கும் தகவல்
அவுஸ்திரேலியாவில் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்தவருக்கு சிவப்பு நிற கல் ஒன்று தட்டுப்பட, தங்க கட்டி என கருதி அதை வீட்டுக்கு எடுத்து வந்தவருக்கு தற்போது அதன் உண்மை என்ன என்பது தெரிய வந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு அருகில் உள்ள மேரிபோரோ பிராந்திய பூங்காவில் இருந்தே David Hole என்பவர் குறித்த சிவப்பு நிற கல்லை கண்டெடுத்துள்ளார்.
2015ல் நடந்த இச்சம்பவத்தில் அதிரடி திருப்பமாக, குறித்த கல்லானது உண்மையில் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான மிக அரிதான விண்கல் என தற்போது தெரியவந்துள்ளது.
குறித்த கல்லை அவர் தங்கம் என்றே நம்பியிருந்ததால், அதை உடைத்துப் பார்க்க பலமுறை முயன்று தோல்வி கண்டுள்ளார். இந்த நிலையில் குறித்த கல்லுடன் மெல்போர்ன் அருங்காட்சியகத்திற்கு சென்றவர் அதன் உண்மையை அறிந்து வியப்பில் ஆழ்ந்துள்ளார்.
மட்டுமின்றி, அந்த கல்லின் தற்போதைய மதிப்பானது கணக்கிட முடியாதது எனவும் கூறப்பட, இதுவரை தமக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள் மொத்தமும் மறக்கடிக்கப்பட்டதாக David Hole தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் அருங்காட்சியகத்தில் பணியாற்றும் Dermot Henry கூறுகையில், தமது 37 ஆண்டுகால அனுபவத்தில், இதுபோன்ற உண்மையான விண்கற்களை காண முடிந்தது இருமுறை மட்டுமே என்றார்.
குறித்த கல்லை ஆய்வுக்கு உட்படுத்திய நிபுணர்கள், தற்போது அந்த கல்லின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த கல்லானது David Hole கண்டெடுத்த பகுதியான மேரிபோரோ பிராந்தியத்தின் பெயரிலேயே அறியப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
விக்டோரியா மாகாணத்தில் இதுவரை மொத்தம் 17 விண்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆயிரம் தங்க கட்டிகளும் மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.