எங்களையும் ஆதரியுங்கள்... விருது வழங்கும் விழா மேடையில் பிரான்ஸ் நடிகை கொடுத்த அதிர்ச்சி
ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாக பிரான்சில் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருது செஸார் விருதுகள்.
பிரான்சில் மூன்று மாதங்களுக்கும் மேலாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாக பிரான்சில் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் செஸார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அந்த விழாவில், சிறந்த உடைக்கான விருதை அறிவிப்பதற்காக Corinne Masiero (57) என்ற நடிகை மேடைக்கு அழைக்கப்பட்டார்.
நிகழ்ச்சிக்கு வரும்போது வேறு உடை உடுத்தியிருந்த Corinne, மேடைக்கு வரும்போது, இரத்தம் தோய்ந்தது போல் காட்சியளிக்கும் உடை ஒன்றை அணிந்து, அதற்கு மேல், கழுதை போல் உடையணிந்திருந்தார்.
அதைக் கண்டு மற்றவர்கள் திகைக்க, மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, மேடையிலேயே உடை களைந்தார் Corinne.
அவரது மார்பில், கலை இல்லையெனில், எதிர்காலம் இல்லை என பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்தது.
அத்துடன், அவரது முதுகில், பிரான்ஸ் பிரதமர் Jean Castexக்கு தெரியப்படுத்தும் வகையில் ஒரு செய்தி எழுதப்பட்டிருந்தது.
அது, கலையைத் திருப்பிக் கொடுங்கள் ஜீன் என்று கூறியது. அவரைப் போலவே அவரது சக நடிகர்களும் இதேபோன்ற கோரிக்கைகளை விடுத்தார்கள்.
என் பிள்ளைகளுக்கு பெரிய பெரிய துணிக்கடைகளுக்குப் போக அரசு அனுமதியளித்துள்ளது, ஆனால், சினிமா தியேட்டர்களுக்குப் போக அரசு அனுமதியளிக்கவில்லை என்றார் இயக்குநரும் தயாரிப்பாளருமான Stephane Demoustier என்பவர்.
கடந்த டிசம்பரிலும் இதேபோல் நூற்றுக்கணக்கான நடிகர் நடிகையர், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பிரெஞ்சு சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் பாரீஸிலும் பிற நகரங்களிலும் கலை அரங்கங்கள் மூடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.