இலங்கையில் அதிபர் மாளிகை அருகே 4-வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்!
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்வெட்டு பிரச்சினை போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
இதனால் மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து இருக்கிறது. தினமும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.
சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலி முகத்திடலில் திரண்டு உள்ளனர். மேலும் இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்க வந்த வண்ணம் உள்ளனர்.
இன, மத, மொழி பேதமின்றி திடலில் குவிந்துள்ள மக்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
அவர்கள் ராஜபக்சேக்களை வீட்டுக்கு அனுப்பும் வரை திடலை விட்டு வெளியேற மாட்டோம் என்று தெரிவித்து அங்கேயே தங்கி கூடாரங்களை அமைத்து அதில் போராட்டக்காரர்கள் தங்கி சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
போராட்ட களத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உள்ள நிலையில் தொடர்ந்து இளைஞர்கள் வருவதால் அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.