லண்டனில் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்ட பெண் ஒரு பல்கலை மாணவி: வெளியாகியுள்ள சில தகவல்கள்
நேற்று காலை, வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Maida Vale என்ற இடத்தில், 41 வயதுள்ள ஆண் ஒருவர், 43 வயதுள்ள பெண் ஒருவரை, பட்டப்பகலில், பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் பாதையில் பெரிய கத்தி ஒன்றால் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்.
அவரை யாராலும் தடுக்க இயலாததால், ஒருவர் அவர் மீது தனது காரை மோதி அவரைத் தடுக்க முயன்றிருக்கிறார். கார் மோதியதில் அந்த நபர் உயிரிழந்த அதே நேரத்தில், கத்தியால் குத்தப்பட்ட பெண் மீதும் கார் ஏற, அவரும் சற்று நேரத்தில் உயிரிழந்துவிட்டார்.
எனவே, காரை ஓட்டிய நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்ட அந்த பெண்ணின் பெயர் Wafah Chkaifi (43) என்றும், மொராக்கோ நாட்டுப் பின்னணி கொண்டவர் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வட ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு பெரிய குடும்பப் பின்னணியைக் கொண்ட Wafah, பிரித்தானியாவில் பிறந்து, லண்டனிலுள்ள Maida Vale பகுதியில் வாழ்ந்துவந்துள்ளார்.
அத்துடன், அவர் இந்த வயதிலும் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வந்ததாகவும், அவருக்கு 16 மற்றும் 18 வயதில் இரண்டு மகன்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அவர் கொல்லப்பட்ட இடத்தில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்திய Chkaifiயின் உறவினரான Haida என்பவர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தன் தாய்க்கு இப்படிப்பட்ட ஒரு மரணம் நேர்ந்திருக்கக்கூடாது என, Chkaifiயின் மகன்களில் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறியது காண்போர் மனதை கரைப்பதாக அமைந்திருந்ததாக பிரித்தானிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.