கனடாவில் காப்பகம் ஒன்றிலிருந்து வீசிய துர்நாற்றம்... என்னவென்று பார்க்கச் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், அங்கு ஒருவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில், ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த ஒருவர், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும்போதெல்லாம் ஒருவித துர்நாற்றம் வீசுவதைக் கவனித்துள்ளார்.
சரி, அது என்னவென்று நாமே போய்ப் பார்க்கலாம் என்று சென்ற அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காந்திருந்துள்ளது.
வேலிக்கருகே இருக்கும், பொருட்கள் போட்டு வைத்திருக்கும் ஒரு அறையில், ஒரு சடலம் கிடந்துள்ளது. அது பல நாட்களாக அங்கு கிடந்ததால் அழுகி உருக்குலைந்து காணப்பட்டுள்ளது. எதிர்பாராத அந்த காட்சியால் அதிர்ச்சியுற்ற அந்த நபர், பயந்து நடுங்கி வெளியே ஒடிவந்து, இரவு நேர ரோந்து பொலிசாரிடம் விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
பொலிசார் உடனடியாக அங்கு சென்று அந்த உடலைக் கைப்பற்றியுள்ளார்கள்.
உயிரிழந்த அந்த நபர் குறித்து எந்த விவரமும் வெளியிடப்படாத நிலையில், அவர் ஏதோ உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கருதுவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அரசு உதவி பெறும் காப்பகம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்து கவனிக்கப்படாமல் கிடந்த விடயம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிசார் தொடர்ந்து அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.