பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட கனேடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி: ஒரு எச்சரிக்கை செய்தி
ட்ரக் ஓட்டி கஷ்டப்பட்டு சம்பாதித்துக்கொண்டிருந்த கனேடிய பெண் ஒருவர், சோர்ந்துபோய், கொஞ்சம் ஈஸியாக பணம் சம்பாதிக்க முடியுமா என்று யோசித்தார்.
விளைவு?
இன்று 102,000 டொலர்களை இழந்து, ஏமாந்துபோய் உட்கார்ந்திருக்கிறார்.
கியூபெக்கிலுள்ள Vaudreuil-Dorionஇல் ட்ரக் சாரதியாக இருப்பவர் Harpreet Sahota. வாரத்திற்கு ஆறு நாட்கள் வரை உழைத்துக் களைத்துப்போன Sahotaவுக்கு, அப்படியும் போதுமான வருவாய் கிடைக்கவில்லை.
அப்படியே கொஞ்ச நாட்கள் சோர்ந்துபோய் உட்கார்ந்துவிட்ட Sahota, கொஞ்சம் எளிமையான, அதே நேரத்தில் நல்ல வருவாய் கிடைக்கக்கூடிய வழி ஏதாவது இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தார்.
அப்போதுதான், பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் அவர் கண்களில் பட்டிருக்கிறது. முதலீடு செய்யும் வாய்ப்பு குறித்து தெரிவித்த அந்த விளம்பரத்தை கிளிக் செய்து தன்னைக் குறித்த விவரங்களை உள்ளிட்டார் அவர்.
அதைத் தொடர்ந்து அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வரத்துவங்கியுள்ளன. LegalTrader.com என்ற நிறுவனத்தின் பெயர் அவரது கவனத்தை ஈர்க்க, அதிலிருந்து தொடர்பு கொண்ட ஒருவரிடம் பேசியிருக்கிறார் Sahota.
அந்த நிறுவனத்தின் சார்பில் பேசிய நபர், 70 சதவிகிதம் வரை ரிட்டர்ன்ஸ் கிடைக்கும் என வாக்களிக்க, 300 டொலர்கள் முதலீடு செய்துள்ளார் Sahota. அதிலிருந்து நல்ல வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாக, அதைப் பயன்படுத்திக்கொண்ட அந்த தொலைபேசி நபர் இனிமையாகப் பேசி மேலும் முதலீடு செய்யத் தூண்ட, தன் திருமணத்துக்காக தாய் சேர்த்துவைத்திருந்த நகைகள் முதற்கொண்டு Sahota செலுத்திய மொத்தத் தொகை 102,000 டொலர்கள்.
பின்னர் தன் பணத்தை எடுக்க அவர் முயற்சி செய்யும்போது, அவருக்கு பிட்காயினாகத்தான் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Crypto investment scams often involve victims downloading a trading platform and transferring crypto into their trading account. Most victims are then unable to withdraw funds. Before investing, always ask for more information and do research. Learn more: https://t.co/caWTPxxsLg pic.twitter.com/8Ib8wkcna1
— Canadian Anti-Fraud Centre (@canantifraud) December 3, 2021
பிட்காயினுக்காக காத்திருக்கிறார் Sahota, ஆனால் எதுவும் வந்தபாடில்லை. பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதே அவருக்கு புரிந்திருக்கிறது. பொலிசாரிடம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் செய்திருக்கிறார்.
தாங்கள் இதுபோல் ஒரு நிறுவனத்திடமிருந்து அழைப்பைப் பெறும்போது, அந்த நிறுவனம் உண்மையானதுதானா என்பதை அறிந்துகொள்ள, Canadian Securities Administrators' National Registration Search என்னும் இணைய அமைப்பில் அந்த நிறுவனம் பதிவு செய்துள்ளதா என்பதை சோதித்துப் பார்த்துக்கொள்ளுமாறு கூறுகிறார்கள் பொலிசார்.
இப்படித்தான் அதிக தொகை கிடைக்கும் என்று கூறுவதால் அதை நம்பி பலர் ஏமாந்து போகிறார்கள் என்று கூறும் பொலிசார், உங்களுக்கு இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் கூறும் குழப்பமான விடயங்கள் புரியவில்லையென்றால், பேசாமல் அதிலிருந்து விலகிவிடுங்கள் என்கிறார்கள்.
ஆனால், Sahotaவைப் பொருத்தவரை அது காலம் கடந்த ஞானம்!