முன்னாள் நண்பனை ஆசை காட்டி பூங்காவுக்கு வரவழைத்த மாணவி... பயங்கர சம்பவத்தின் தீர்ப்பில் மாற்றம்
பிரித்தானியாவில், முன்னாள் நண்பன் ஒருவனை ஆசை காட்டி பூங்கா ஒன்றிற்கு ஒரு மாணவி வரவழைக்க, நம்பிச் சென்ற அவனை வேறிரண்டு மாணவர்கள் கத்தியால் குத்திக் கொன்றார்கள்.
ஜனவரி மாதம் 3ஆம் திகதி, Reading என்ற இடத்தைச் சேர்ந்த Olly Stephens (13) என்ற சிறுவனை பூங்கா ஒன்றிற்கு வருமாறு அழைத்திருக்கிறாள் ஒரு 14 வயது மாணவி. அவள் அவனுக்கும் அவனது பெற்றோருக்கும் அறிமுகமானவள். முன்பு அவள் Ollyயுடன் பழகியிருக்கிறாள். பிறகு இருவரும் பிரிந்துவிட்டிருக்கிறார்கள்.
இது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். சிறுவர்கள்தானே அவர்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், சிறுவர்கள் என்று நாம் நினைப்பவர்கள் சமூக ஊடகங்களில் என்னென்ன செய்கிறார்கள் என்பது பல நேரங்களில், அதுவும் குறிப்பாக மேலை நாடுகளில் அவர்களது பெற்றோருக்கே தெரிவதில்லை.
ஒரு சிறுவன் தண்டிக்கப்படும் காட்சி ஒன்றை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்த Olly, அதை அவனது அண்ணனுக்கு அனுப்பியிருக்கிறான். அதுவும், அவனுக்கு நடந்ததை தெரியப்படுத்தி அந்த சிறுவனை பாதுகாக்கும் நோக்கில் அதைச் செய்திருக்கிறான்.
ஆனால், அந்த அண்ணனோ, அதை தவறாக எடுத்துக்கொண்டு கோபத்தில், அவனும் அவனது மற்றொரு நண்பனுமாக சேர்ந்து, Ollyயைத் தாக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு கூட்டாளியாக தங்கள் தோழியும் Ollyக்கு பிடித்த, அவனது முன்னாள் தோழியுமான ஒரு 14 வயது மாணவியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த பெண்ணும் அவன் செத்தால் கூட பரவாயில்லை, அவனுக்கு என்ன நடக்கிறதோ, அது அவன் விதி என்று கூறியிருக்கிறாள்.
இத்தனைக்கும் அந்த மாணவிக்கு 14 வயது, Ollyயைத் தாக்க திட்டமிட்டவர்களில் ஒருவனுக்கு வயது 13, மற்றொருவனுக்கு வயது 14...
ஆக, அந்த மாணவி ஆசை வார்த்தை கூறி Ollyயை பூங்காவுக்கு அழைக்க, எமன் அழைப்பது தெரியாமல் Olly பூங்காவுக்குச் செல்ல, அங்கு காத்திருந்த அந்த சிறுவர்கள் இருவரும் அந்த மாணவியின் கண் முன்னாலேயே அவனை அடித்து நொறுக்க, ஒரு கட்டத்தில் ஒரு சிறுவன் கத்தி ஒன்றை எடுத்து Ollyயைக் குத்தியிருக்கிறான்.
அவனை இரத்த வெள்ளத்தில் விட்டு விட்டு மூன்று பேரும் அங்கிருந்து சென்றுவிட, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவசர உதவியை அழைக்க, மருத்துவ உதவிக்குழுவினரால் Ollyயைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டிருக்கிறது.
நினைத்துக் கூட பார்க்க முடியாத இந்த கோர வழக்கில், அந்த சிறுவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட, அந்த மாணவிக்கோ 3 வருடங்கள் 2 மாதங்கள் மட்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த மாணவிக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது என மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, ’உபயோகம் இல்லாத சுயநலம் பிடித்த’ அந்த மாணவிக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானது அல்ல என்று கூறி, அவளுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மூவருமே சிறுவர்கள் என்பதால், அவர்களது பெயர்கள் வெளியிடப்படவில்லை.