அமெரிக்காவில் மற்றொரு துப்பாக்கிச்சூட்டை துணிச்சலாக தடுத்து நிறுத்திய இளம்பெண்: பெரும் சேதம் தவிர்ப்பு
இளம்பெண் ஒருவரின் துணிச்சல், அமெரிக்காவில் நிகழவிருந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டையும், அதனால் ஏற்பட இருந்த பெரும் சேதத்தையும் தவிர்த்துள்ளது.
அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவிலுள்ள Charleston என்ற இடத்தில் ஒரு பிறந்தநாள் பார்ட்டி நடந்துகொண்டிருந்திருக்கிறது.
அந்த வழியாக ஒரு நபர் மிக வேகமாக காரை ஓட்டிச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதாகவும், அதனால் மெதுவாக செல்லுமாறும் அங்கிருந்தவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
சற்று நேரத்தில் அதே இடத்துக்கு துப்பாக்கி ஒன்றுடன் திரும்பிவந்த அந்த நபர், பார்ட்டி நடக்கும் இடத்தை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் துவங்கியுள்ளார்.
அந்த பார்ட்டியில் குழந்தைகள் உட்பட 30,40 பேர் இருந்திருக்கிறார்கள்.
அப்போது, அந்த பார்ட்டிக்கு வந்திருந்த ஒரு பெண், துப்பாக்கியால் ஒருவர் சுடுவதைக் கண்டும் பயந்து ஓடாமல், தன்னிடமிருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து அந்த தாக்குதல்தாரியை சுட்டுக் கொன்றிருக்கிறார்.
Image - wowktv.com
அவரது துணிச்சலான, உடனடி சமயோகித முடிவால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிசார், அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாது என்று தெரிவித்துள்ளார்கள்.
சுட்டுக்கொல்லப்பட்ட நபருடைய பெயர் Dennis Butler (37). அவர் குற்றப்பின்னணி கொண்ட ஒருவராவார். அப்படியிருக்கும்போது அவரால் எப்படி துப்பாக்கி வாங்க முடிந்தது என்று பொலிசார் விசாரித்துவருகிறார்கள்.
Dennisஐ சுட்டுக் கொன்று பெரும் சேதத்தைத் தவிர்த்த அந்த பெண், பொலிசார் அல்ல என்றும், அவர் ஒரு சாதாரணக் குடிமகள், அந்த நபர் துப்பாக்கியால் சுடத் துவங்கியதும், மற்றவர்களைப் போல பயந்து ஓடாமல், துணிச்சலாக நின்று அவனை எதிர்கொண்டு, பல உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார் என்றும் தெரிவித்துள்ள பொலிசார் அவரது பெயர் முதலான எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.
அந்தப் பெண், அந்த தாக்குதல்தாரியை சுட்டுவிட்டு, பொலிசார் வரும் வரை அங்கேயே இருந்துள்ளார். பொலிஸ் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.