கொரோனா நோயாளி மருத்துவமனைக்குள் கொண்டு வந்த பொம்மை... சந்தேகத்தில் ஆராய்ந்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கனடாவின் ஒன்ராறியோவில், மருத்துவமனைக்கு வந்த கொரோனா நோயாளி ஒருவர், தன்னுடன் ஒரு பொம்மையைக் கொண்டு வந்துள்ளார்.
அவர் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதால், அவரது உடைமைகளை மருத்துவமனை ஊழியர் ஒருவர் சோதித்துள்ளார்.
அப்போது, அந்த நோயாளி கொண்டு வந்த பொம்மையின் வயிற்றுப்பகுதியில் ஒரு கீறல் இருப்பதைக் கவனித்த அந்த ஊழியர் அதைப் பிரித்துப் பார்க்க, அதற்குள் நிறைய மாத்திரைகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
அவை, Ivermectin மாத்திரைகள்!
Ivermectin என்பது கால்நடைகளின் வயிற்றிலுள்ள பூச்சிகளை நீக்குவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். அமெரிக்காவில் சிலர் இந்த மாத்திரையை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், அது கொரோனா சிகிச்சையில் பலனளிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், ஒன்ராறியோவிலுள்ள Queen's பல்கலை தொற்றுநோயியல் நிபுணரான Dr. Gerald Evans, ஆரம்ப கட்ட ஆய்வுகள் சில இந்த மாத்திரை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படலாம் என கூறியது உண்மைதான் என்றும், ஆனால், அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால், அதனால் பயங்கரமான பக்க விளைவு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது, நஞ்சு அருந்துவதற்கு இணையான பாதிப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோ மருத்துவமனைக்குள் Ivermectin மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, கொரோனா நோயாளிகள் கொண்டு வரும் சந்தேகத்துக்குரிய பொருட்கள் மீது ஒரு கண் வைத்துக்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.