புடின் உடனான சில மணி நேர சந்திப்பு: சுவிஸில் பைடன் செலவிட்ட மொத்த தொகை வெளியானது
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ரஷ்ய- அமெரிக்க ஜனாதிபதிகளின் சிறப்பு உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் ஜோ பைடன் முதன்முறையாக ரஷ்ய ஜனாதிபதி புடினை இந்த உச்சி மாநாடில் சந்தித்துள்ளார்.
இந்த உச்சி மாநாடு சுமூகமாக நடந்து முடிந்துள்ள நிலையில், பைடன் தங்கியிருந்த அந்த சில மணி நேரங்களுக்காக செலவான தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
15ம் திகதி உள்ளூர் நேரப்படி 4.22 மணிக்கு சுவிட்சர்லாந்தில் தரையிறங்கியது அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ விமானம். தொடர்ந்து ஹெலிகொப்டர் வாயிலாக அவர் சிறப்பு மிக்க Intercontinental ஹொட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குறித்த ஹொட்டலில் ஒரு இரவு தங்க வாடகை மட்டும் 30,000 பிராங்குகள் வசூலிக்கப்படுகிறது. ஜோ பைடனின் சுவிஸ் வருகை முடிவான பின்னர், ஒரு மாதம் முன்னர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் சிலர் ஜெனீவா வந்திருந்ததுடன், Intercontinental ஹொட்டலுக்கு சென்று பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கான செலவு 15,000 பிராங்குகள் என கூறப்படுகிறது. மேலும், இந்த உச்சி மாநாடு தொடர்பில் வந்திருந்த அதிகாரிகளுக்கான தங்கும் அறைகள், பயன்படுத்தப்பட்ட கருத்தரங்கு அறைகளுக்கான வாடகையாக அமெரிக்க நிர்வாகம் சுமார் 1 மில்லியன் பிராங்குகள் செலவிட்டுள்ளன.
இதில் பாதி தொகை Intercontinental ஹொட்டலுக்கு வருவாயாக செல்லும் என்றே கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்களுக்கான வாடகை கட்டணமாக சுமார் 2.16 மில்லியன் பிராங்குகள் செலவிடப்பட்டுள்ளன.
மட்டுமின்றி, இந்த சிறப்புமிக்க உச்சி மாநாடு தொடர்பிலான தகவல்களை ஒளிபரப்பும் ஊடகங்களுக்காக அமெரிக்க நிர்வாகம் 808,000 பிராங்குகள் செலவிட்டுள்ளது.
இதில், ஊடகவியலாளர்கள் தங்கிய ஹொட்டல் அறைகளுக்கான கட்டணம், வாடகை டாக்ஸி கட்டணம், இணைய சேவைக்கான கட்டணம் உள்ளிட்டவைகளும் அடங்கும் என்றே கூறப்படுகிறது.
குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி பைடன் தங்கியிருந்த ஹொட்டலிலேயே தங்கியிருந்தனர். சிலர் Beau-Rivage ஹொட்டலில் தங்கி இருந்துள்ளனர். இந்த ஹொட்டலில் ஒரு நாள் இரவு தங்க 160,000 பிராங்குகள் கட்டணமாக வசூலிக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பைடன் நிர்வாகம் 1.5 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதியுடனான சில மணி நேர உச்சி மாநாடு, ஒரு இரவு ஹொட்டலில் தங்கிய செலவு என ஜோ பைடன் சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த அந்த சில மணி நேரங்களுக்காக மட்டும் சுமார் 4 மில்லியன் பிராங்குகள் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.