யோசிக்காமல் புடின் குறித்து அமெரிக்க அதிபர் பிரயோகித்த வார்த்தைகள்: பிரான்ஸ் கண்டனம்
நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், உணர்ச்சிவசப்பட்டு, யோசிக்காமல் புடின் குறித்து சில வார்த்தைகளை பேசிவிட்டார்.
இந்த ஆள் இனி ஆட்சியிலிருக்கக்கூடாது என்ற பொருளில், 'For god's sake this man cannot remain in power' என்று கூறினார் பைடன்.
அத்துடன், உக்ரைனுக்கு வெளியே வேறு எந்த நாட்டின்மீதும் கைவைக்க நினைக்கவேண்டாம் என்றும், குறிப்பாக நேட்டோ எல்லைக்குள் ஒரு இஞ்ச் இடத்தில் கூட கால்வைக்க முயற்சிக்கவேண்டாம் என்றும் அவர் புடினை எச்சரித்தார்.
ஆனால், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், பைடனைக் கண்டித்துள்ளார். யோசிக்காமல் பேசாதீர்கள் பைடன் என்று கூறியுள்ள மேக்ரான், வார்த்தைகள் அல்லது செயல்கள் மூலம் நிலைமையை மோசமாக்கவேண்டாம் என்று கூறியுள்ளார்.
காரணம், இன்று முதல் 30ஆம் திகதி வரை துருக்கியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளன. அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ள நிலையில், பைடனின் பேச்சால் பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என மேக்ரான் கருதுகிறார்.
இதற்கிடையில், அமெரிக்க அதிபரின் கருத்துக்கு விளக்கம் கொடுத்துள்ள அமெரிக்க மாகாணங்கள் செயலரான Antony Blinken, ரஷ்ய ஜனாதிபதியான புடின், உக்ரைன் அல்லது வேறு எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்க தனது வலிமையைப் பயன்படுத்தக்கூடாது என்ற அர்த்தத்திலேயே பைடன் பேசியதாகவும், ரஷ்யா மட்டுமில்லை, எந்த நாட்டின் ஆட்சியிலும் மாற்றம் செய்யும் எந்த திட்டமும் அமெரிக்காவுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், பைடனின் கருத்துக்கு பதிலளித்த கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov, ரஷ்யாவை யார் ஆளுவது என்பதை திரு பைடன் அவர்கள் முடிவு செய்ய முடியாது, அது ரஷ்ய கூட்டமைப்பின் மக்கள் முடிவு செய்யவேண்டிய விடயம் என்றார்.