உக்ரைன் போர் உங்கள் பிரச்சினையும்தான்: ஆசிய நாடுகளுக்கு மேக்ரான் கூறும் செய்தி
உக்ரைன் போர் உங்கள் பிரச்சினையும்தான் என்று ஆசிய நாட்டவர்களிடம் கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
உக்ரைன் போரால் ஏற்பட்ட பிரச்சினைகள்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது அதை ஒரு செய்தியாக மட்டும் பார்த்துக்கொண்டிருந்த பல நாடுகள், அந்தப் போரால் தங்கள் நாடுகளில் பெட்ரோல் விலை உயர்ந்து, உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோதுதான் போரின் உண்மையான தாக்கத்தை உணர்ந்தன.
ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் மேக்ரான் வலியுறுத்திய விடயம்
இந்த விடயத்தைத்தான் ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாட்டில் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் போர் ஆசிய நாட்டவர்களுக்கான பிரச்சினையும் கூடத்தான் என்று கூறிய மேக்ரான், உக்ரைனில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கெதிராக ஆசிய நாடுகளும் தங்கள் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துவதில் இணைந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
image - File
மாநாட்டின்போது தொழில்துறைத் தலைவர்களிடம் பேசிய மேக்ரான், உக்ரைன் பிரச்சினை ஸ்திரத்தன்மையைக் குலைத்துவிடும் என்றும், ஆகவேதான், இது உங்கள் பிரச்சினையும்தான் என்பதைக் கூறுவதற்காகவே பிரான்ஸ் ஒரு ஒருமித்த கருத்தை உருவாக்க முயன்றுவருவதாகவும் தெரிவித்தார்.
ஆசியாவில் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு முடிவு கட்டவேண்டும் என்று கூறிய மேக்ரான், நாங்கள் ஆதிக்கம் செலுத்துவதிலோ, முரண்பாடுகளிலோ நம்பிக்கை வைப்பதில்லை, நாங்கள் ஸ்திரத்தன்மையில் நம்பிக்கை வைத்துள்ளோம் என்றார்.