காபிக் கொட்டை மூட்டைகளுக்குள் இருந்த வெள்ளை நிறப் பொடி: சுவிஸ் பொலிசாருக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தில், காபி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட காபிக் கொட்டை மூட்டைகளுக்குள் சந்தேகத்துக்குரிய வெள்ளை நிறப்பொடி அடங்கிய பொட்டலங்கள் இருந்ததைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலையின் பணியாளர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
Romont என்னும் இடத்தில் அமைந்துள்ள அந்த Nespresso தொழிற்சாலைக்கு விரைந்த சுவிஸ் பொலிசார், அந்த மூட்டைகளை சோதனை செய்ய, அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், அந்த சாக்கு மூட்டைகளுக்குள் மறைந்து வைக்கப்பட்டிருந்தது கொக்கைன் என்னும் போதைப்பொருள் ஆகும். அந்த மூட்டைகள் பிரேசிலிலிருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
அந்த மூட்டைகளிலிருந்து மொத்தம் 500 கிலோ எடையுள்ள கொக்கைனை பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள். அதன் மதிப்பு சுமார் 50 மில்லியன் யூரோக்கள் ஆகும்.
சுவிட்சர்லாந்தில் இவ்வளவு பெரிய அளவில் காபிக் கொட்டைகளுக்கிடையே கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த போதைப்பொருளால் காபிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என Nespresso நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துக்கொண்டுள்ளது.