குப்பையில் வீசப்போன பழைய பொருட்களை கடைக்கு கொண்டு சென்ற பெண்: அவரை கோடீஸ்வரியாக்கிய பொருள்!
பிரித்தானியப் பெண்மணி ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும்போது பழைய பொருட்களை எல்லாம் எடுத்து குப்பையில் வீசச் சென்றிருக்கிறார்.
Northumberlandஇல் வாழும், தனது 70 வயதுகளிலிருக்கும் அந்த பெண்ணிடம், அவரது பக்கத்து வீட்டுக்காரர், அந்த பொருட்களை குப்பையில் போடுவதற்கு பதிலாக பழைய பொருட்கள் விற்கும் கடையில் கொண்டு விற்கலாமே என்று ஆலோசனை கூற, அதன்படி, அந்தப் பெண் தன் பழைய நகைகள் சிலவற்றுடன் இந்த பொருட்களையும் கடைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.
அப்போது அந்த நகைகளுடன் ஒரு பவுண்டு நாணயத்தை விட பெரியதான ஒரு கல் இருப்பதை அந்த கடைக்காரர் கவனித்திருக்கிறார். அதைப் பார்த்ததும் அது ஒரு போலி வைரமாக இருக்கும் என்று நினைத்த அந்த கடைக்காரர், பிறகு அதை எடுத்துச் சென்று மூன்று நாட்களாக ஆராய, அவருக்கு அது ஒரு உண்மையான வைரம் என்று தோன்றியிருக்கிறது.
உடனே, லண்டனிலுள்ள நிபுணர்களிடம் அவர் அதை அனுப்ப, அவர்கள் அதை ஆராய்ந்து, அது 34.19 காரட் எடையுள்ள மிக உயர்ந்த ஒரு வைரம் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.
அதன் மதிப்பு 2 மில்லியன் பவுண்டுகள்!
தயவு செய்து என்னைக் குறித்த விவரங்களை இரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள் என அந்த கடைக்கராரிடம் கூறியுள்ளாராம் அவர்.
அடுத்த மாதம் அந்த விலையுயர்ந்த அரிய வகை வைரக்கல் ஏலம் விடப்பட உள்ளது.