உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது: தடுப்பூசி தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரித்தானியா எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசிகளை பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்வதை தடுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்த நடவடிக்கையும் சட்டவிரோதமானது மற்றும் உலகளவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நற்பெயரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என பிரித்தானிய அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
தடுப்பூசி விவகாரத்தில் பிரித்தானியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பாதுகாப்பு துறை செயலர் பென் வாலஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடுப்பூசி தட்டுப்பாடால் அவதிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா மூன்றாவது அலையின் விளிம்பில் சிக்கியுள்ளதை அடுத்து, பிரித்தானியாவுக்கான கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுவது தடுத்து நிறுத்துவதை தவிர வேறு வழி இல்லை என ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் Ursula von der Leyen தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தார்.
இந்த நிலையிலேயே பாதுகாப்புத்துறை செயலர் வாலஸ், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திற்கு கண்டிப்பாக தெரியும், உலகம் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது, என்றார்.
பிரித்தானியாவுக்கான தடுப்பூசிகளை தடுத்து நிறுத்துவது என்பது சட்டவிரோதம் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் நற்பெயருக்கு அது களங்கம் விளைவிக்கும் செயல் என சுட்டிக்காட்டியுள்ளார்.