மோசமானது இனிதான் வர இருக்கிறது... பிரான்சுக்கு ஒரு எச்சரிக்கை
பிரான்சில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, பிரான்சில் வாழும் நபர் ஒருவர், இந்த ஆண்டில் உணவுப்பொருட்கள் வாங்குவதற்காக, கூடுதலாக 224 யூரோக்கள் செலவிடவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது.
எக்கச்சக்கமாய் அதிகரிக்கும் விலைவாசியால் சில குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்கான திறனே அச்சுறுத்தலுக்காளாகும் ஒரு நிலை உருவாகலாம் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் விலைவாசியால், இந்த ஆண்டு இறுதிக்குள் சராசரியாக நபர் ஒருவருக்கான உணவுப்பொருட்களுக்கான செலவு 224 யூரோக்கள் அதிகரிக்க இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
நேற்று அந்த ஆய்வு வெளியானதைத் தொடர்ந்து காப்பீட்டு நிறுவனமான Allianz Trade, மோசமானது இனிதான் வர இருக்கிறது என்று கூறியுள்ளது.
அந்நிறுவனத்தின் பிரிவு ஆலோசகரான Aurélien Duthoit கூறும்போது, பல்பொருள் அங்காடிகளில் உணவுப் பொருட்களின் விலை 8.2 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என்றும், அதனால் நபர் ஒருவருக்கான உணவுப்பொருட்களுக்கான சராசரி வருடாந்திர செலவு 224 யூரோக்களாகவும், குடும்பத்திற்கான செலவு 2,962 யூரோக்களாகவும் இந்த ஆண்டில் அதிகரிக்க இருப்பதாக தெரிவிக்கிறார்.
இந்த உணவுப்பொருட்கள் விலைவாசி உயர்வால், சில குடும்பங்களால் சேமிக்க முடியாத நிலை மட்டும் உருவாகும், அதே நேரத்தில் மற்ற சில குடும்பங்களுக்கோ, தங்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட சந்திக்க முடியாத நிலை உருவாகும் என எச்சரிக்கிறார் Aurélien Duthoit.