ஜேர்மன் நகரமொன்றில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த இளைஞர் தெரிவித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்
தெற்கு ஜேர்மனியில், பொலிஸ் நிலையம் ஒன்றில் சரணடைந்த 18 வயது இளைஞர் ஒருவர், தான் ஒரு கணவனையும் மனைவியையும் கொலை செய்வதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று நள்ளிரவு, பவேரியாவிலுள்ள Mistelbach என்ற நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து உதவி கோரி சத்தம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தவர்கள் அங்கு விரைந்துள்ளார்கள்.
அவர்கள், அந்த வீட்டின் தரைத்தளத்தில், 47 வயதுள்ள பெண் ஒருவரும், 51 வயதுள்ள அவரது கணவரும் கத்திக்குத்துக் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.
உடனடியாக அங்கு விரைந்த பொலிசார் குற்றவாளியைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஆனால், அதிகாலை 4.00 மணியளவில், பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற இளைஞர் ஒருவர், தான்தான் அந்த தம்பதியரைக் கொலை செய்ததாகக் கூறி சரணடைந்துள்ளார்.
அந்த இளைஞர் அந்த வீட்டிலுள்ளவர்களின் உறவினர் அல்ல. ஆனால், அவர் அந்த வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கிறார். இரவு அந்தக் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
அவர் ஏன் அந்த தம்பதியரைக் கொலை செய்தார் என்பது தெரியவில்லை.
தம்பதியருக்கு நான்கு சிறுபிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களும் அந்த வீட்டிலேயேதான் வசிக்கிறார்கள்.
சம்பவம் நடந்தபோது அந்த பிள்ளைகள் அந்த வீட்டில்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாராவது நடந்ததைப் பார்த்தார்களா என்பது குறித்த விவரம் தெரியவில்லை. அவர்கள் தற்போது அரசின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அவர்களிடமும், கொலை செய்ததாகக் கூறியுள்ள இளைஞரிடமும் விசாரணை தொடர்கிறது.