பிரான்சில் வறுமையில் வாடும் ஏராளம் பெண்கள்: கவலையை ஏற்படுத்தியுள்ள ஆய்வு முடிவுகள்
பிரெஞ்சு ஆய்வமைப்பு ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வொன்றின் முடிவுகள், பிரான்ஸ் நாட்டில் பெண்கள் பெருமளவில் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளன.
ஒரு மில்லியன் பேருக்கு உணவளித்த தொண்டு நிறுவனம்
பிரெஞ்சு தொண்டு நிறுவனமான Secours Catholique, 2022ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பேருக்கு உணவு முதலான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விடயங்களை வழங்கியதாக தெரிவித்துள்ளது.
அப்படி அந்த தொண்டு நிறுவனத்திடம் உதவி பெற்றவர்களில் 75 சதவிகிதம்பேர், தனியாக வாழ்பவர்கள், 25.7 சதவிகிதம் பேர், ஆண் துணையின்றி, குழந்தையை தனியாக வளர்க்கும் தாய்மார்கள், 20.9 சதவிகிதம் பேர், ஆண் துணையின்றி தனியாக வாழும் பெண்கள்.
இந்த எண்ணிக்கை, 52 சதவிகிதத்திலிருந்து, முன்னெப்போதும் இல்லாத அளவில், தற்போது 57.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது, வறுமையில் வாடும் பெண்களின் எண்ணிக்கை மெதுவாக, ஆனால் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதையே காட்டுகிறது.
காரணம் என்ன?
இப்போதெல்லாம், சின்னச் சின்ன விடயங்களுக்காக கூட தம்பதியர் விவாகரத்துக்களை நாடும் ஒரு நிலை அதிகரித்துவருகிறது. ஆனால், பல நாடுகளில், ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் பெற்றோரைப் பிரிந்து சொந்தக்காலில் நிற்கும் நிலை உள்ளதால், திருமணங்கள் உடையும்போது, பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் என்னும் ஒரு உண்மையையும் மறுப்பதற்கில்லை.
தம்பதியர் பிரியும்போது, பிள்ளைகள் தாயின் பொறுப்பில் கொடுக்கப்பட, அந்த பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காக, முழு நேர வேலைக்குச் செல்ல முடியாத ஒரு நிலை பல பெண்களுக்குக் காணப்படுகிறது.
பகுதி நேர வேலைக்குச் செல்வதால், வருவாய் குறைவாக இருக்க, அந்த வருவாயைக் கொண்டு குழந்தையைப் படிக்கவைக்கும் நிலையும் உள்ளதால், அடிப்படை உணவு முதலான தங்கள் தேவைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு கஷ்டப்படும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்.
இப்படி, இவ்வளவு கஷ்டங்களை வைத்துக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கு கொஞ்சமாவது நல்ல உணவைக் கொடுத்துவிடமாட்டோமா என்று தொண்டு நிறுவனங்களை நாடி வருவோரில் 60 சதவிகிதத்தினரை, அதாவது, முழு நேர வேலையில் இல்லாத ஒரு கூட்டம் மக்களை, பிரான்ஸ் அரசு, ‘inactive’ அதாவது, செயல்படாதவர்கள் என அழைக்கிறது.
ஆனால், செயல்படாதவர்கள் என அழைக்கப்படும் அந்த கூட்டத்தினரின் அன்றாட நடவடிகைகளைக் கவனித்தால், அவர்கள் ஒரு நிமிடம் கூட சும்மா இருப்பதில்லை என்பதை தெளிவாக அறிய முடியும். அவர்கள் பள்ளிக்கும் வீட்டுக்குமாக ஓடுகிறார்கள், மருத்துவரைப் பார்க்க ஓடுகிறார்கள், உணவு வங்கிகளைத் தேடி ஓடுகிறார்கள், உடல் நலமில்லாத தங்கள் உறவினர்களை கவனித்துக்கொள்ள ஓடுகிறார்கள், நிரந்தரமில்லை என்று தெரிந்தும் சின்னச் சின்ன வேலைகளுக்கான நேர்காணல்களுக்காக ஓடுகிறார்கள் என்கிறார் Jean Merckaert என்னும் தொண்டு நிறுவன ஊழியர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |