பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... மனைவியை ஆபாசமாக வர்ணித்ததால் வெடித்த கனடா பிரதமர்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்துவரும் நிலையில், இதுவரை தனக்கெதிரான கருத்துக்களுக்கு அமைதி காத்துவந்த ட்ரூடோ, பொறுத்தது போதும் என பொங்கியெழுந்து விட்டார்.
கனடாவில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்த ஜஸ்டின் ட்ரூடோ, தான் கொரோனாவைக் கையாண்ட விதம் மக்களுக்கு தன் மீது நல்லெண்ணத்தை உருவாக்கியிருக்கும், இம்முறை பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தார்.
ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, தடுப்பூசியை எதிர்க்கும் கூட்டத்தினர் அவருக்கு பெரும் பிரச்சினையை உருவாக்கி வருகின்றனர். அத்துடன், மருத்துவமனை மற்றும் பொது ஊழியர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டும் என அவர் கூறியிருப்பதும் அவருக்கு எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. அதனால், அவரது தேர்தல் பிரச்சாரங்களில் கலாட்டா செய்வதும், பிரச்சாரங்களை நடத்த விடாமல் தடுப்பதுமாக பெரும் இடைஞ்சலை உருவாக்கி வருகிறார்கள் அவர்கள்.
இன்னொரு பக்கம், கொரோனாவின் நான்காவது அலை வந்துகொண்டிருக்கிறது என மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த கொரோனா காலகட்டத்தில் ட்ரூடோ தேர்தலை நடத்த முடிவு செய்ததால் நடு நிலை வகிக்கும் வாக்காளர்களும் கோபமடைந்துள்ளார்கள்.
இப்படி எதிர்பார்த்ததற்கு மாறாக ட்ரூடோ எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில், இன்னொரு மோசமான விடயம் கனடாவில் நடந்து வருகிறது. அதாவது, எதிர்ப்பாளர்கள் ட்ரூடோவை கெட்ட வார்த்தைகளால் விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
ஆபாச வார்த்தைகள் அடங்கிய பதாகைகளை வெளிப்படையாக ஏந்தி, கெட்ட வார்த்தைகளை சத்தமாக கூறி ட்ரூடோவை விமர்சிக்கும் ஒரு பழக்கம் தற்போது கனடாவில் துவங்கியுள்ளது.
எனக்கு தடித்த தோல், நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன் என்று கூறியிருந்தார் ட்ரூடோ. ஆனால், அவரையே கொந்தளிக்கச் செய்யும் ஒரு சம்பவம் நடந்துவிட்டது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபியில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றிற்காக ட்ரூடோ அமர்ந்திருக்க, அங்கு வந்த எதிர்ப்பாளர் ஒருவர், கெட்ட கெட்ட வார்த்தைகளால் ட்ரூடோவை விமர்சிக்கத் தொடங்கினார்.
ட்ரூடோ அமைதியாக அம்ர்ந்திருக்க, ஒரு கட்டத்தில் அந்த நபர், உன் மனைவி எங்கே, அவள் ஒரு ***** என கேள்விப்பட்டேன் என ட்ரூடோவின் மனைவியை ஆபாச வார்த்தையால் விமர்சிக்க, அதற்கு மேல் ட்ரூடோவால் பொறுக்கமுடியவில்லை.
சட்டென எழுந்த ட்ரூடோ, அந்த நபரைப் பார்த்து, நீ சென்று தொல்லை கொடுக்க மருத்துவமனை எதுவும் இல்லையா என கத்திவிட்டார்.
பின்னர் இதுகுறித்து பேசிய ட்ரூடோ, என்னை என்ன சொன்னாலும் பரவாயில்லை, ஆனால், என குடும்பத்தை விமர்சிப்பதை என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றார்.
தடுப்பூசிக்கு எதிராக போராட்டக்காரர்கள் மருத்துவமனைகளுக்கு முன் போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், ஏதாவது மருத்துவமனை முன் சென்றுதானே சத்தமிடுவீர்கள், அருகே மருத்துவமனை எதுவும் இல்லையா, இங்கே வந்து சத்தமிடுகிறீர்களே என்ற அர்த்தத்தில்தான் அவர் சத்தமிட்டதாக கூறப்படுகிறது.
பொதுவாக, ட்ரூடோவின் மனைவியும் அவருடன் பிரச்சாரம், பேட்டி போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வதுண்டு. ஆனால், நல்ல வேளையாக இந்த சம்பவத்தின்போது அவர் ட்ரூடோவுடன் இல்லை!