கனடாவில் வாழும் தெற்காசிய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வேலையை விட முடிவு செய்துள்ளார்கள்: காரணம் என்ன?
கனடாவில் வாழும் தெற்காசிய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வேலையை விட முடிவு செய்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதற்கு என்ன காரணம்?
CulturaliQ என்னும் ரொரன்றோவை மையமாகக் கொண்ட ஆய்வு நிறுவனமும், Pink Attitude Evolution என்னும் தெற்காசிய பெண்களை ஆதரிக்கும் கனேடிய தொண்டு நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன.
ஆய்வுட்படுத்தப்பட்ட தெற்காசிய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தங்கள் வேலையை விட்டுவிட்டு, வேறு வாய்ப்புகளைத் தேட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
அவர்களில் 48 சதவிகிதம் பெண்கள் தங்கள் வேலை திருப்திகரமானதாக இல்லை என்று சொல்லி வேலையை விட முடிவு செய்துள்ளார்கள். 37 சதவிகிதம் பெண்கள், அலுவலகத்தில் மோசமான நிர்வாகம் காரணமாக தங்கள் வேலையை விட முடிவு செய்துள்ளார்கள்.
2021 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் 2,200 பேர் கலந்துகொண்டார்கள். அவர்களில் 700 பேர் தெற்காசிய பெண்கள், 400 பேர் வெள்ளையின பெண்கள், 158 பேர் தெற்காசிய ஆண்கள் மற்றும் 300 பேர் வெள்ளையின ஆண்கள்.
65 சதவிகித தெற்காசிய பெண்கள், தாங்கள் செய்யும் வேலையை விட்டுவிட்டு, சொந்தத் தொழில் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மொத்தத்தில் 46 சதவிகித பெண்களும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
பெருந்தொற்றும், பெண்கள் பலர் தங்கள் வேலைகளை விட முடிவு செய்ததற்கு ஒரு காரணமாக அமைந்ததாக தெற்காசிய பெண்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், கடந்த சில ஆண்டுகளாக தங்கள் ஊதிய எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, 64 சதவிகித தெற்காசிய பெண்கள் தெரிவித்துள்ளார்கள்.
கனடாவில், தெற்காசியர்கள் பெருமளவிலான சிறுபான்மையினத்தவர்களாக இருப்பதாக இருப்பதாக கனடா புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், 2016 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தெற்காசிய பெண்கள்தான் அதிகம் கல்வி கற்றவர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆக, அதிக கல்வி கற்றவர்களாக இருக்கும் நிலையிலும், நிறம், ஸ்பான்சர்கள் கிடைக்காமை, வேலையிடத்தில் ஆதரவின்மை, பல்வேறு அலுவலகங்களில் வேலை தேடியும், அதிகம் படித்திருந்தும் வெள்ளையர்களை விட குறைவாக மதிக்கப்படுதல் என பல்வேறு காரணங்களால், தாங்கள் தங்கள் அலுவலக வேலையை விட்டுவிட்டு சொந்தத் தொழில் துவங்குதல் போன்ற வேறு திட்டங்களை வைத்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் இந்த தெற்காசிய பெண்கள்.