என் மகனை திருநங்கையாக மாத்திட்டாங்க.., கண்ணீருடன் நிற்கும் தாய்
திருநங்கைகள் சேர்ந்து எனது மகனை திருநங்கையாக மாற்றி, பணம் கேட்டு மிரட்டுவதாக காவல் ஆணையத்தில் கண்ணீருடன் தாய் புகார் அளித்துள்ளார்.
11 -ம் வகுப்பு படிக்கும் மகன்
சென்னை புரசைவாக்கம் பொன்னன் தெருவை சேர்ந்த தம்பதியினர் தங்கராஜ் மற்றும் சத்யா. இதில் தங்கராஜ் கூலி வேலை செய்து வருகிறார். சத்யா வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்னனர். ஒரு மகன் கல்லூரியிலும், மற்றொரு மகன் 11 -ம் வகுப்பும் படித்து வருகிறார்.
இதில், கடந்த 10 -ம் திகதி இளைய மகனை சில திருநங்கைகள் அழைத்து சென்று திருநங்கையாக மாற்றியதாகவும், மகனை மீட்டு தர வேண்டும் எனவும் தாயார் பொலிஸில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தாய் புகார்
இதனால், சிறுவனின் தாயார் சத்யா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த 10 -ம் திகதி இளைய மகனை 5 திருநங்கைகள் அழைத்து சென்று மூக்கு குத்தி திருநங்கையாக மாற்றியுள்ளனர். என் மகனை பார்க்க சென்ற போது பார்க்க விடாமல் தடுத்தனர்.
தினமும் அரைமணி நேரம் மட்டும் தான் பார்க்க வேண்டும் என மிரட்டினர். என் மகனை வசூலுக்கு அழைத்து செல்வோம் என்றும் கூறினர். பின்னர் ஊர் மக்கள் உதவியுடன் திருநங்கைகளிடமிருந்து என் மகனை மீட்டேன். இதனால் ஷாலு மற்றும் சீனி உள்ளிட்ட 10 திருநங்கைகள் எனது வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும், எனது மகனை திரும்ப அவர்களிடம் ஒப்படைக்கவில்லையென்றால் ரூ.5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டினர். சம்மந்தப்பட்ட திருநங்கைகள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |