BMW காருக்கு அடியில் தெரிந்த கால்கள்... உடல் நசுங்கி இறந்து கிடந்த திருடன்! அனாதைகளான 3 குழந்தைகள்
பிரித்தானியாவில் 500 பவுண்ட் பணத்தேவைக்காக, கார் பாகத்தை திருட முயன்று, மூன்று குழந்தைகளின் தந்தை உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள Rhondda-வில், புதன்கிழமை காலை Russell Seldon எனும் நபர் தனது BMW காரை வெளியே எடுத்து செல்ல, தனது வீட்டின் எதிரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய பார்க்கிங் கூடாரத்துக்கு சென்றார்.
அப்போது, தனது காருக்கு அடியில் 2 கால்கள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், அசைவின்றி தெரிந்த அந்த கால்களை வெளியே இழுக்க முயன்றார். ஆனால் அவரால் இழுக்க முடியவில்லை.
பயத்தில் அவர் உடனடியாக பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார். பொலிஸார் விரைந்து வந்ததையடுத்து, காருக்கு அடியில் கிடந்த நபரை வெளியே எடுத்தனர்.
ஆனால், அந்த நபரின் மார்பு, முகம் மற்றும் கழுத்து பகுதிகள் நசுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என பொலிஸார் உறுதிசெய்தனர்.
அவரது பச்சை குத்தப்பட்டிருக்கும் கைகள் மற்றும் அவரது கைரேகையைக் கொண்டு, உயிரிழந்த நபர் 25 வயதே ஆகும் Daniel Stephens என பொலிஸாருக்கு தெரியவந்தது.
அதன்பிறகு, அவரைப் பற்றி விசாரித்தபோது, அவர் Torfaen கவுன்டியில் உள்ள Blaenavon நகரத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு 3 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
சம்பவம் நடந்த இரவுக்கு முந்தைய நாள், அவருக்கு அவசரமாக 500 பவுண்ட் பணத்தேவை இருந்ததாகவும், அதைப் பெறுவதற்காக BMW காரில் இருக்கும் Catalytic Converter எனும் பாகத்தை திருடி விற்க திட்டமிட்டிருந்ததாகவும், டேனியலின் நண்பர் ஒருவர் பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
மேலும், அவர் இறந்து கிடந்த இடத்தில் காருக்கு அருகில் ஒரு டார்ச் லைட் மற்றும் கார் ஜாக் கிடந்ததாக காரின் உரிமையாளர் பொலிஸாரிடம் கூறினார்.
இதையடுத்து, அவர் திருட முயற்சிக்கும்போது, ஜாக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டு, கார் அவர் மீது விழுந்ததில் உடல் நசுங்கி, கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு (asphyxia) உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய பணத்தேவைக்காக திருட முயன்று 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.