மூன்றாவதாக ஒரு பள்ளியில் 182 குழந்தைகளின் உடல்கள்... கனடாவில் மீண்டும் அதிரவைக்கும் ஒரு சம்பவம்
கனடாவில் ஏற்கனவே இரண்டு இடங்களில் பூர்வக்குடியின குழந்தைகளின் நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், மூன்றாவதாக ஒரு இடத்தில் 182 குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்தோரை கைநீட்டி வரவேற்கும் நாடு என ஒருபக்கம் நற்பெயர் பெற்றுள்ள கனடா, மறுபக்கம் பூர்வக்குடியின குழந்தைகள் ஏராளமானோரின் சாவுக்கு காரணமான நாடு என்ற அவப்பெயரை சமீப நாட்களாக பெற்றுவருகிறது.
முதலில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் Kamloops என்ற இடத்திலுள்ள பூர்வக்குடியின குழந்தைகளுக்கான பள்ளி அமைந்துள்ள இடத்தில் 215 பிள்ளைகளின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள சம்பவம் கனடாவை உலுக்கியது.
அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், Saskatchewanஇலுள்ள Marieval என்ற இடத்திலுள்ள மற்றொரு பள்ளியில் 751 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கபட்டன.
இந்நிலையில், தற்போது மூன்றாவதாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Cranbrook என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் 182 பிள்ளைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் நாடே கொந்தளித்துப்போயுள்ளது.
புதைக்கப்பட்டுள்ள உடல்களை சேதப்படுத்தாமல், ரேடார் உதவியுடன் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Cranbrook என்ற பகுதிக்கருகே அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளப்படபோது, 7 முதல் 15 வயது வரையுள்ள 182 பிள்ளைகளின் உடல்கள் அங்கு புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ள குழந்தைகள் Ktunaxa என்ற பூர்வக்குடியின குழந்தைகள் என நம்பப்படுகிறது. 1990கள் வரை, சுமார் 150,000 பூர்வக்குடியின குழந்தைகள், 139 உண்டுறை பள்ளிகளில் கட்டாயத்தின் பேரில் சேர்க்கப்பட்டார்கள்.
ஆனால், அவர்களில் பலர் ஆசிரியர்களாலும் தலைமை ஆசிரியர்களாலும் அடித்து உதைக்கப்பட்டுள்ளார்கள், அத்துடன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அத்துடன், அந்த பூர்வக்குடியின குழந்தைகளின் மொழியும் கலாச்சாரமும் அந்த பள்ளிகளால் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. பூர்வக்குடியின குழந்தைகளை அழித்தொழிக்கும் அளவுக்கு அவர்களுக்கு அப்படி என்ன வெறியோ புரியவில்லை!