பிரித்தானியாவில் மூன்று மாதங்களில் 13 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாவுக்கு பலி: தொடரும் சோகம்
பிரித்தானியாவில் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்று மாத காலகட்டத்தில், 13 கர்ப்பிணிப்பெண்கள் கொரோனாவால் பலியாகியுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அப்படியிருந்தும், இன்னமும் பல மருத்துவமனைகள் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்க மறுப்பதாக ஆய்வை தலைமையேற்று நடத்திய பேராசிரியர் Marian Knight தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின்போதும் முறையே 9 மற்றும் 11 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளார்கள்.
ஆனால், அப்போது கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நடைமுறையில் இல்லாதிருந்தது. இப்போது உயிரிழந்தவர்களில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி பெறாத கர்ப்பிணிகள் என்பதால், தடுப்பூசி இருந்தும் பல கர்ப்பிணிப்பெண்கள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, சுமார் 15 சதவிகித கர்ப்பிணிப்பெண்கள்தான் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.