தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - திருமாவளவன் எதிர்ப்பு
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி துவக்கி வைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவ மனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
திருமாவளவன் எதிர்ப்பு
இந்நிலையில், அந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தவெக'வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. எஞ்சிய 44 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன.
தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட ரூ.50 ஆயிரம் முதல் ரூ. ஒரு இலட்சம் வரையில் வசூலிக்கின்றனர். சிசேரியன் என்னும் அறுவை மூலம் நடக்கும் பிறப்பு எனில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர்.
கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.
இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |