திருவள்ளூர் மாணவி மரணம்! சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்..சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றம்
திருவள்ளூரில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சரளா (17), தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட விவகாரம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மேலும் தக்களூரில் மாணவியின் உறவினர்கள் பலர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவி மரணம் தொடர்பிலான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.